Published : 10 Aug 2023 03:23 PM
Last Updated : 10 Aug 2023 03:23 PM

“சிலப்பதிகாரம் குறிப்பிடுவது ‘தமிழர்கள்’தான், ‘திராவிடர்கள்’ அல்ல” - மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: “சிலப்பதிகார வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். சிலப்பதிகாரம் ‘தமிழர்கள்’ என்றுதான் சொல்கிறது. அதில் ‘திராவிடர்கள்’ என சொல்லப்படவில்லை” என்று திமுகவுக்கு பதிலளிக்கும் வகையில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளாக நேற்றும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பேசினர். | வாசிக்க > மணிப்பூரை இந்தியாவின் அங்கமாக பிரதமர் கருதவில்லை - ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

இந்நிலையில், மக்களவையில் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 14 நிமிடங்கள் பேசினார். அதில் மத்திய அரசின் சாதனைகள், பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவரித்தார்.

மேலும், “அவையின் மூத்த உறுப்பினர், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மதுரை - எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். 1,977 கோடி ரூபாயில் மத்திய அரசின் செலவில் கட்டப்படும். தமிழக அரசுக்கு இதனால் எந்தவித கடன் சுமையும் இல்லை. அதனால், அவை உறுப்பினர்கள் தவறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம். மொத்தம் 950 படுக்கை வசதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைகிறது. ஆகையால், தமிழகம் இதில் கவலைகொள்ள வேண்டாம். இது, மத்திய அரசின் சுமை.

நாங்கள் மருத்துவமனை கட்டுவோம் என சொன்னதும், எப்போது என கேள்வி எழுப்புகிறார்கள். மதுரை - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானது. அதனால், மருத்துவமனைக் கட்டுமான பணி செலவும் கூடியது. இதற்கு மாநில அரசுதான் பொறுப்பு. இதற்கு கரோனா தொற்றுப் பரவலும் ஒரு காரணம்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடை என்பது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் அமலுக்கு வந்தது. அந்தத் தடையை நீக்கி தமிழ் பாரம்பரியத்தை காப்பாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி.

சிலப்பதிகார வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். சிலப்பதிகாரம் தமிழர்கள் என்றுதான் சொல்கிறது. அதில் திராவிடர்கள் என சொல்லப்படவில்லை. செங்கோலை பிரதமர் மோடி மக்களவையில் வைத்தால், அதை ஏற்க முடியாது. 10-க்கும் மேற்பட்ட மேற்கோள்களை புறநானூறு மற்றும் திருக்குறளில் இருந்து பிரதமர் மோடி மேற்கோள் காட்டி பேசியுள்ளார். காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்பட்டுள்ளது” என்றார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேறினர். அப்போது “ஏன் வெளியேறுகிறீர்கள். அப்படிச் சென்றால் எனது உரையை தொலைக்காட்சியில் பாருங்கள்” என்று அவர்களை நோக்கி நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x