Published : 08 Aug 2023 12:09 PM
Last Updated : 08 Aug 2023 12:09 PM

“கியான்வாபி மசூதி ஆய்வை கண்காணிப்பதில் மகிழ்ச்சி” - வழக்குத் தொடர்ந்த இந்துப் பெண்கள் குழு கருத்து

வாரணாசி: கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறையினர் மேற்கொள்ளும் ஆய்வை அன்றாடம் கண்காணிக்கும் பணி மகிழ்ச்சியளிப்பதாக வழக்கைத் தொடர்ந்த இந்துப் பெண்களில் ஒருவரான ரேகா பதக் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த கோயிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மசூதியை தங்களிடம் ஒப்படைக்க அப்பகுதி இந்துக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில், வாரணாசி கியான்வாபி மசூதியின் வெளிப்புற சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க கோரும் வழக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த விவகாரத்தில் மசூதியின் ஒசுகானாவில் சிவலிங்கமும், சுவர்களில்திரிசூலம், தேவிகளின் சிற்பங்களும் பதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்தது. இதனால் மசூதியினுள் கோரப்பட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்து விட்டது.இதனையடுத்து, கியான்வாபி மசூதியில் 5வது நாளாக இன்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தொல்லியல் துறை அதிகாரிகளின் ஆய்வை ஒட்டி மசூதி வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மசூதியில் சில முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கியான்வாபி மசூதி வழக்கைத் தொடர்ந்த இந்துப் பெண்களில் ஒருவரான ரேகா பதக் கூறுகையில், "இன்று மசூதியின் முக்கியப் பகுதியான 'டாஹ்கானா'வில் சோதனை நடைபெறவுள்ளது. அதன் மீது எங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் இந்த ஆய்விடத்துக்கு வருவது எங்களுக்கு ஒரு கடமை போல் குதூகலம் அளிக்கிறது. எங்கள் பணி ஆய்வை கண்காணிப்பது மட்டுமே காலை 8 மணி முதல் 12.30 மணி வரை ஆய்வு நடைபெறுகிறது. 12.00 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை. பின்பு மீண்டும் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஆய்வு நடைபெறுகிறது. ஆய்வினை நாங்கள் முழுமையாகக் கண்காணிக்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x