Published : 08 Aug 2023 11:38 AM
Last Updated : 08 Aug 2023 11:38 AM

மக்களவையில் கேள்வி நேரத்துக்கு ‘முட்டுக்கட்டை’ போட்ட ‘நியூஸ் க்ளிக்’ விவகாரம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் குறித்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய மக்களவை, கேள்வி நேரம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றதில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. ஆக 11-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலையில் மக்களவை கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது நேற்றைய ஒரு விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் கட்சி முயன்றது.

திங்கள்கிழமை காங்கிரஸ் மீது பாஜக எம்.பி நிஷாந்த் துபே சுமத்திய குற்றசாட்டு தொடர்பான விஷயங்கள் நேற்று அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. பின்னர் மீண்டும் அவை சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரத்தைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

12 மணிக்குத் தொடங்கும் விவாதம்: மக்களவையில் செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் சரியாக பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரத்துக்குப் பின்னர் தொடங்கும் இந்த விவாதம் இரவு 7 மணி வரை விவாதம் நீடிக்கும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இதே நேரத்தில்தான் விவாதம் நடைபெறும். ஆகஸ்ட் 10 அன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விவாதத்தை மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து முதல் பேச்சாளராக உரையாற்றுவார் எனத் தெரிகிறது. ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் பேச்சாளராக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக எம்.பி.யின் குற்றாச்சாட்டு என்ன? - மக்களவை நேற்று மதியம் 12 மணிக்கு கூடியது. அப்போது, மீண்டும் எம்.பி. பதவியை பெற்ற ராகுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் மக்களவைக்குள் நுழைந்தார் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ‘நியூஸ் க்ளிக்’ இணைய ஊடகம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது: “அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்க ஊடகங்கள் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவியை பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், நியூஸ்கிளிக் ஊடகம் ரூ.38 கோடி நிதியை திரட்டியுள்ளது.

அவர்களுக்கு எவ்வாறு நிதியுதவி கிடைத்தது, அதனால் பயனடைந்தவர்கள் யார் என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். 2005 மற்றும் 2014-க்கு இடையில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் கட்சி சீனாவிடமிருந்து பணத்தை பெற்றுள்ளது. கடந்த 2008-ல் சோனியாவையும், ராகுலையும் அவர்கள் சந்திக்க அழைத்திருந்தனர். டோக்லாம் நெருக்கடியின்போது அவர்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்” என்று நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர்களான திக் விஜய் சிங், ரன்தீப் சுர்ஜேவாலா, மாவோயிஸ்டுகள் மற்றும் ரோகினி சிங் ஸ்வாதி சதுர்வேதி போன்ற பத்திரிகையாளர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பதை நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளதாக துபே குற்றம்சாட்டினார். இதையடுத்து, அவையில் கூச்சல் குழப்பும் நிலவியது. ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்துபே ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவரது கருத்துகள் மக்களவை பதிவுகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம்: மக்களவை இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை காலையில் கூடியது. சபையின் தலைவர் பியூஸ் கோயல், தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, அவைத் தலைவரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் இருப்பது, அவையில் தொடர்ந்து குழப்பம் விளைவிப்பது போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு, திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, அவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x