Published : 07 Aug 2023 07:26 AM
Last Updated : 07 Aug 2023 07:26 AM

நீதிபதி ரோகித் தியோ ராஜினாமா செய்வதற்கு முன்பு உச்ச நீதிமன்றம் பணியிட மாற்றம் செய்ததாக தகவல்

நீதிபதி ரோகித் தியோ

புதுடெல்லி: மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரோகித் தியோ, நீதிமன்ற அறையில் தனது ராஜினாமா தகவலை வெளியிடுவதற்கு முன்பு, உளவுத் துறை தகவலின் அடிப்படையில் அவரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பணியிட மாற்றம் செய்த தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி ரோகித் தியோ தனது அறையிலேயே ராஜினாமாவை அறிவித்தார். அதனால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நீதிபதி ரோகித் தியோ கூறும்போது, ‘‘தனிப்பட்ட காரணங்களுக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்தக் காரணத்துக்காகவும் எனது சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன்’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2016-ல் மகாராஷ்டிர மாநில அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் ரோகித் தியோ. பின்னர் 2017 ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2025 டிசம்பர் வரை உள்ளது. அதற்குள் அவர் ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் எதற்காக திடீரென பதவியை ராஜினாமா செய்தார் என்ற விவரம் வெளியாகவில்லை.

முன்னதாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக டெல்லி பல்கலைக்கழக முன்னாள்பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவுக்கு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது, சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு நீதிபதி ரோகித் தியோ தீர்ப்பளித்தார். எனினும், அந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வேறு நீதிபதி தலைமையில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்தவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் ஆலோசனை நடத்தி உள்ளது. அதன்பின், நீதிபதி ரோகித் தியோவை, மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. அந்த தகவல் கிடைத்த சில மணி நேரங்களில் நீதிபதி ரோகித் தியோ தனது ராஜினாமாவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாவோயிஸ்ட் ஆதரவாளர் சாய்பாபா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் தகவல்கள் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் நீதிபதி ரோகித்தை பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் முடிவெடுத்துள்ளது. உளவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்வதாக சம்பந்தப்பட்ட நீதிபதி ரோகித் தியோவுக்கு கொலீஜியம் காரணத்தையும் கூறியிருக்கிறது. நீதிபதி ரோகித் தியோ மட்டுமன்றி, வேறு உயர் நீதிமன்றங்களில் இருந்தும் 23 நீதிபதிகளை கொலீஜியம் பணியிட மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x