Last Updated : 29 Nov, 2017 09:38 AM

 

Published : 29 Nov 2017 09:38 AM
Last Updated : 29 Nov 2017 09:38 AM

ஜெயலலிதாவின் மகள் என கூறும் பெங்களூரு பெண் யார்? - ‘அப்போ பெரியம்மா.. இப்போ அம்மா அம்ருதாவின் கதை

‘‘நான் தான் ஜெயலலிதாவின் மகள். சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்துகொள்ளுங்கள்'' என பெங்களூரு பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம்வயது ஜெயலலிதா சாயலில் இருக்கும் அம்ருதாவை போயஸ் கார்டனுக்கு நெருக்கமான வட்டாரமே ஆச்சரியமாக பார்க்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருந்தாலும் மைசூருவிலும், மண்டியா அருகேயுள்ள மேல்கோட்டையிலும் வாழ்ந்தனர். மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதா, தந்தையின் மறைவுக்கு பிறகு பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தார். சந்தியா நடிகையானதால், மகளுடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

கர்நாடகாவில் வசிக்கும் சிலர் அவ்வப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் என்றும், ஜெயலலிதாவின் தங்கை என்றும், உறவினர் என்றும் குரல் எழுப்புவது உண்டு. ஆனால் ஜெயலலிதா, ஜெயக்குமாரை தவிர வேறு யாரையும் தனது ரத்த உறவுகளாக ஏற்கவில்லை. அண்ணன் என்று கூறிய மண்டியா வாசுதேவனையும், பெங்களூரு சைலஜாவையும் பக்கத்தில் கூட சேர்த்துக் கொள்ளவில்லை.

முதலில் தங்கை

பெங்களூருவில் உள்ள கெங்கேரியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. மைசூரு ஐயங்காரான இவர் தன் மனைவி ஷைலஜா, மகள் அம்ருதாவுடன் (மஞ்சுளா) வசித்து வந்தார். கடந்த 2010-ல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருந்தபோது பார்த்தசாரதி மனைவி ஷைலஜா, மகள் அம்ருதாவுடன் அங்கு வந்தார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம், ‘‘என் மனைவி ஷைலஜா, ஜெயலலிதாவின் உடன் பிறந்த தங்கை. அவரைச் சந்திக்க அவரின் தொலைபேசி எண் கொடுங்கள்'' எனக் கேட்டார். அடுத்தடுத்த நாட்களில் தமிழ் பத்திரிகையாளர்களை அணுகி, அதே விஷயத்தை சொன்னார்.

தமிழ் பத்திரிகைகள் சைலஜா குறித்து செய்தி வெளியிடாத நிலையில், கன்னட பத்திரிகை கள் ‘‘ஷைலஜா ஜெயலலிதா வின் தங்கை'' என செய்தி வெளி யிட்டன.

அப்போ பெரியம்மா..!

ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானபோதும், சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவரைச் சந்திக்க ஷைலஜா முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா அவரை பார்க்க அனுமதிக்காததால் ஷைலஜா சிறை வாசலில் நின்று கொண்டு, ''நான் தான் ஜெயலலிதாவின் தங்கை. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ செய்து பாருங்கள்'' என சவால் விட்டார்.

இன்னொரு பக்கம் அம்ருதா, ‘‘ஜெயலலிதா என் பெரியம்மா. சிறுவயதில் என்னைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் பெங்களூருவுக்கு வந்திருக்கிறார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாவற்றையும் சிலர் அழித்துவிட்டனர். இதை சொல்வதால் எங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என பேட்டி கொடுத்தார். இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, ஷைலஜாவின் பேட்டியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு போட்டார். கடைசிவரை ஜெயலலிதாவை சந்திக்காமலே ஷைலஜா கடந்த 2015-ல் காலமானார். சில மாதங்களில் அவரது கணவர் பார்த்தசாரதியும் கால மானார்.

இப்போ மகள்..!

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்க்க அம்ருதா முயற்சித்தார். அதற்கு சசிகலா குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலை காண அம்ருதா சென்னைக்கு சென்றார். அங்கு சூழ்ந்திருந்த கூட்டதால் அவரால், ஜெயலலிதாவின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு அம்ருதா, ‘‘நான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். எனது தாயாருக்கு ஐயங்கார் முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெறாததால், என்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்''என கடிதம் எழுதி பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு அனுப்பி வைத்தார்.

அதற்கு எந்த பதிலும் கிடைக்காததால் சென்னையில் உள்ள வழக்கறிஞர் நண்பர்கள் மூலமாக இப்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பெரியம்மா என சொல்லிவந்த அம்ருதா, இப்போது அவரை அம்மா என அழைக்க தொடங்கி இருக்கிறார்.

ஜெயலலிதா இறந்த பிறகு அவரது மகள் என கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாக அம்ருதாவை அறிந்தவர்கள் கருதுகிறார்கள். “ சொத்துக்கு ஆசைப்பட்டோ, விளம்பரத்துக்கு ஆசைப்பட்டோ அம்ருதா இதை செய்யலாம்.

உச்ச நீதிமன்றம் வரை செல்லும் விவரம் இல்லாத அம்ருதாவை யாரோ சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள். இதன் மூலம் அம்ருதாவின் பின்னால் இருப்பவர்களுக்கு சொத்து ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஆதாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது’’ என அம்ருதாவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x