Last Updated : 19 Nov, 2017 11:30 AM

 

Published : 19 Nov 2017 11:30 AM
Last Updated : 19 Nov 2017 11:30 AM

200 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டம்

டெல்லியின் ரபி மார்க் பகுதியில் நாடாளுமன்றத்தின் அருகில் ‘ரயில் பவன்’ எனும் 5 மாடி கட்டிடத்தில் ரயில்வே அமைச்சகம் உள்ளது. இங்கு பணிக்கு வரும் அதிகாரிகள் ஓய்வுபெறும் வரை இங்கேயே இருந்துவிடும் நிலை உள்ளது. இவர்களுக்கு இடமாற்ற உத்தரவு அளிக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் செல்வாக்கு மூலம் அதை ரத்து செய்துவிடுவதாக புகார்கள் உள்ளன. இதனால் தேவைக்கு அதிகமாக ரயில்வே அமைச்சகத்தில் அதிகாரிகள் உள்ளதாகவும் புதிதாக பணிக்கு வரும் அதிகாரிகள் அமர இடமின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு குடியிருப்புகள் அவர்கள் ஓய்வு பெறும் வரை காலியாவதில்லை. இதனால் மற்ற துறை அதிகாரிகளுக்கு அரசு குடியிருப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இதன்படி தலைமையகத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 40 சதவீத அலுவலர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “கடந்த 13-ம் தேதி அமைச்சகம் சார்பில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத் தலைவர், செயலாளர், வாரிய உறுப்பினர்கள், இயக்குநர் ஜெனரல்கள் ஆகியோருக்கான அந்த உத்தரவில், அனைவரும் தங்கள் அலுவலர்களில் 40 சதவீதம் பேரை இடமாற்றம் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் 200 அதிகாரிகள் டெல்லிக்கு வெளியே பிற மாநிலங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தனர்.

ஏர் இந்தியாவின் தலைவராக இருந்த அஷ்வினி லோஹானியை ரயில்வே வாரிய புதிய தலைவராக, அமைச்சர் பியுஷ் கோயல் கொண்டுவந்தார். இவர் ரயில்வேக்கு வந்தது முதல் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக ரயில்வேயின் கடைநிலை ஊழியர்களை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைகளில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வெளியூர் செல்லும் அதிகாரிகள் உயர் வகுப்புக்கு பதிலாக சாதாரண வகுப்புகளில் மக்களுடன் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் குறைகளை கண்டறிய முடியும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனால் அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் பல அதிகாரிகள் சாதாரண வகுப்பில் பயணம் செய்வதை தவிர்க்க, தங்கள் பயணத்தையே தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் தனது உத்தரவுகளை மீறும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை டெல்லியில் இருந்து அனுப்ப இந்த இடமாற்றம் திட்டம் கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x