Last Updated : 08 Nov, 2017 09:21 AM

 

Published : 08 Nov 2017 09:21 AM
Last Updated : 08 Nov 2017 09:21 AM

எனது தொலைபேசியை மத்திய அரசு ஒட்டு கேட்கிறது: கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் குற்றச்சாட்டு

மத்திய அரசு எனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறது என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர்எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெல்காமில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது அரசியல் எதிரிகள் மீது பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வருகிறது. அந்த வகையிலே கர்நாடக அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸாருக்கு நெருக்கமானோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

கடந்த ஓராண்டாக மத்திய அரசு எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்டு வருகிறது. இப்போது என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொலைபேசியையும் ஒட்டுக்கேட்டு வருகிறது. எனக்கு சந்தேகம் ஏற்பட்ட உடன் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தினேன். அப்போது எங்கள் அனைவரின் தொலைபேசி, செல்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடமும் முறையிட்டேன். எனக்கு கிடைத்த தகவலின்படி எங்களது தொலைபேசி அழைப்புகளை வருமான வரித்துறை தனிக்குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் எங்களது வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படலாம். எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீலின் இந்த குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்பி ஷோபா கரந்தலஜே கூறும்போது, “யாருடைய தொலைபேசியையும் மத்திய அரசு ஒட்டுக்கேட்கவில்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டை தெரிவிப்பது சரி அல்ல. மோடியின் ஆட்சியில் அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையீடு செய்வதில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x