Published : 24 Nov 2017 11:59 AM
Last Updated : 24 Nov 2017 11:59 AM

டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

‘‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி, ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும்’’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கிவிடும். ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முடிவெடுக்காமல் இருந்தது. இதற்கு இமாச்சல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் காரணம் என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இமாச்சலில் கடந்த 9-ம் தேதி வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. குஜராத்தில் டிசம்பர் 9-ம் தேதி முதல் கட்ட தேர்தலும் 14-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. அதற்கு மறுநாளே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த்குமார் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி, ஜனவரி 5-ம் தேதி வரை நடத்தப்படும். நாடாளுமன்ற விவகாரங்களுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவை குழுவின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இமாச்சல், குஜராத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தை கூட்டுவது சரியான நடவடிக்கைதான். இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒத்திவைத்துள்ளனர்.

எனவே, இந்த குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாகவும் ஆக்கப்பூர்வமானதும் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் அனந்த்குமார் கூறினார்.

‘‘ஜனவரி 1 புத்தாண்டு அன்று எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவார்களா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அனந்த்குமார் கூறும்போது, ‘‘நாடாளுமன்றத்தின் எல்லா வேலை நாட்களிலும் எம்.பி.க்கள் வரவேண்டும். மேலும், இந்தக் கூட்டத் தொடரில் 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) மசோதா உட்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன’’ என்றார்.

இந்தக் கூட்டத் தொடர் மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x