Published : 01 Aug 2023 07:29 AM
Last Updated : 01 Aug 2023 07:29 AM

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடிதான் வெளிநாட்டில் தஞ்சமடைவார்: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்

லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “சுதந்திரப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று மகாத்மா காந்தி முழக்கமிட்டார். இதுபோல, இந்தியாவில் இருந்து ஊழல் வெளியேற வேண்டும், தீவிரவாதம் வெளியேற வேண்டும், குடும்ப ஆட்சி வெளியேற வேண்டும் என்ற முழக்கங்கள் இப்போது தேவைப்படுகின்றன” என்றார்.

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:

பிரதமர் மோடிதான் நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என பிரதமர் மோடி கவலைப்படுகிறார். ஒருவேளை தேர்தலில் தோற்றால் வெளிநாட்டில் தஞ்சமடைய அவர் திட்டமிட்டுள்ளார். அதனால்தான் இப்போதே அவர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனக்கு வசதியான இடத்தைத் தேடி வருகிறார்.

இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க நான் ஆவலாக உள்ளேன். நாட்டின் அரசியல் சாசனத்தை சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். அதை நாம் முறியடிக்க வேண்டும். பாஜகவை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x