Last Updated : 08 Jul, 2014 09:53 AM

 

Published : 08 Jul 2014 09:53 AM
Last Updated : 08 Jul 2014 09:53 AM

ரூ.40 கோடி பேரம் பற்றி எங்கேயும் விவாதிக்கத் தயார்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கேள்விக்கு குமாரசாமி பதிலடி

சட்ட மேலவை உறுப்பினர் சீட் கொடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி ரூ.40 கோடி பேரம் பேசிய ரகசிய ஆடியோ சிடி வெளியானது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு திங்கள்கிழமை விளக்கம் கேட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரில் கருத்து தெரிவித்த குமாரசாமி, ''அந்த சிடி குறித்து சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விவாதிக்க தயாராக இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

ரூ.40 கோடி 'சிடி' வெளியீடு

சட்ட மேலவை தேர்தலில் சீட் வழங்குவதற்கு ரூ.40 கோடி தர வேண்டும் என பிஜாப்பூர் மாவட் டத்தை சேர்ந்த ம.ஜ.த. மாவட்ட செயலாளர் விஜூ கவுடா பாட்டீலுக்கு நெருக்கமானவரிடம் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேரம் பேசுவது போன்ற ரகசிய சிடி கடந்த சனிக்கிழமை இரவு வெளியானது.

அந்த சிடியில் 'நம்ம கட்சியில் இருக்கும் 40 எம்.எல்.ஏ.வும் சித்தரா மையாவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். காசு செலவு செய்து வெற்றிப் பெற்றிருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு கோடி கேட்கிறார்கள். இப்போது எல்லாம் யாரு காசு இல்லாம ஓட்டு போடுறாங்க. நீங்க ஜெயிச்சா மட்டும் பீஜாப்பூர் மக்களுக்கு நல்லதா செய்யப் போறீங்க' என பேசியுள்ளார். இந்த சிடி விவகாரம் நாடு முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம் கேட்கும் மத்திய அரசு

இந்நிலையில் திங்கள்கிழமை இது குறித்துப் பேசிய மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ''குமாரசாமி தவறு செய்துள்ளதற்கான ஆதாரமாக ஆடியோ சிடி கிடைத்துள்ளது. அவர் மீது தயவுதாட்சண்யம் பார்க்காமல் கர்நாடக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியலை தூய்மையாக்க முடியும்'' என்றார். மேலும் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரூ. 40 கோடி பேரம் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

எதையும் சந்திக்க தயார்

இந்நிலையில் சிடி விவகாரம் தொடர்பாக குமாரசாமி திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசியபோது, ''அந்த சிடியில் பேசியது நான்தான்.ஆனால் இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட பணம் பெறவில்லை. என்னை குற்றம்சாட்டும் இங்குள்ள அனைத்து கட்சிகளுமே பணம் பெற்றுக்கொண்டுதான் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

நான் யாருக்கும் பயப்படாத வெளிப்படையான அரசியல்வாதி. ஆனால் மற்றவர்கள் வேட்பாளர் களை மட்டுமில்லை மக்களையும் ஏமாற்றுகிறார்கள். கர்நாடகாவில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் அரசியல் நிலை இப்படிதான் இருக்கிறது. கூட்டணி கூட கோடிக்கணக்கில் பேரம் பேசிவிட்டு தான் கூட்டணி சேருகிறார்கள். பா.ஜ.க.வோ, காங்கிரஸோ யாருடனும் பேரம் பேசாமல் அரசியல் செய்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இதைப் பற்றி பேச‌ யாருக்கும் அருகதை இல்லை. நான் யாரும் இதுவரை செய்யாத ஒன்றை செய்துவிடவில்லை என மக்களுக்கு தெரியும். தற்போது நடைபெற்றுவரும் சட்ட பேரவை கூட்டத்தொடரில் கூட இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். வெளியே பேசினால் அதற்கும் தக்க பதிலடி கொடுக்க தயார்” என்றார்.

சி.டிக்கு சித்தராமையா காரணமா?

இந்நிலையில் குமாரசாமியின் சிடி வெளியானதற்கு அவருடைய அரசியல் எதிரியும் முன்னாள் நண்பருமான கர்நாடக முதல்வர்தான் காரணம், குமாரசாமியின் அரசியல் வாழ்க்கையை அழிக்கும் வகையில் அவர்தான் ஆள் அனுப்பி சிடி தயாரித்ததாக‌ ம.ஜ.த. கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால் சித்தராமையா, ''சிடி விவகாரத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. விசாரணை யின்போது உண்மை வெளிவரும்'' என்றார். இந்நிலையில் குமாரசாமி யுடன் பேரம் பேச ஆள் அனுப்பியதாக கூறப்படும் விஜூகவுடா பாட்டீல் கூறியபோது, “இது எனக்கு எதிரான சதி. சிடியை வெளியிட்ட நபரை பிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். ஓரிரு நாட்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலோ,கர்நாடக உயர் நீதிமன்றத்திலோ புகார் அளிக்க திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x