Last Updated : 29 Nov, 2017 09:54 AM

 

Published : 29 Nov 2017 09:54 AM
Last Updated : 29 Nov 2017 09:54 AM

மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு: நிதி ஆயோக் பரிந்துரையால் மத்திய அரசு திட்டம்

ராகி, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் ஒன்றாக கம்பு விளங்குகிறது. இதில் மற்ற தானியங்களை விட இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வறட்சிக் காலங்களிலும் இதன் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே அதன் பயன்பாட்டை நாடு முழுவதிலும் ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய நிதி ஆயோக், மதிய உணவுத் திட்டத்தில் கம்பு சோறு அளிக்கவும், பொதுமக்களுக்கு ரேஷன் மூலமாக கம்பு தானியம் வினியோகிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, அதிக சத்துள்ள கம்பு தானியம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் எங்கள் அமைச்சகம் இறங்கியுள்ளது. மதிய உணவுக்கும் ரேஷன் கடைகளுக்கும் இதை விநியோகிக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது கம்பு சேமிக்கும் வசதி குறைவாக இருப்பதால் அதை அதிகரித்த பிறகு இதன் விநியோக அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே குறைந்த நீரில் அதிக தானிய விளைச்சல் பெறுவது குறித்து இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலும் ஆய்வு செய்து வருகிறது. இதன் மீதான ஆய்வறிக்கையை கவுன்சில் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் ‘விவசாயிகள் உற்பத்தி அமைப்பு’ என ஒன்றை ஏற்படுத்தி, கம்பு உள்ளிட்ட அனைத்து தானியங்களும் பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

கம்பு நல்ல விளைச்சல் தந்தாலும்,அதற்கு ஆதரவு குறைவாக இருப்பதால் இதை விளைவிக்க விவசாயிகள் முன்வருவதில்லை என மத்திய அரசு கருதுகிறது. தற்போது வளரும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் இருப்பதால் அதை சரிசெய்யவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் கம்பு பயன்பாடு குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 72 % நகரங்கள், 73% கிராமங்களில் இதன் பயன்பாடு குறைந்துள்ளது. அரிசி பயன்பாடு 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதற்கு கம்பு உணவை சமூக அந்தஸ்துக்கு குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் அதை மதிய உணவு திட்டத்தில் விநியோகிக்க சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பும் என்பதும் மத்திய அரசின் அச்சமாக உள்ளது.

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்துடன் கூடிய 13 வகை கலவை சாதம் மற்றும் முட்டை மசாலாக்கள் வழங்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x