Published : 21 Nov 2017 09:50 AM
Last Updated : 21 Nov 2017 09:50 AM

டெல்லியில் 108 அடி உயர அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் தூக்கி இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை

டெல்லியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

கரோல் பாக் பகுதியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக துணை நிலை ஆளுநரிடம் பேச வேண்டும். அமெரிக்காவில் விண்ணைத் தொடும் கட்டிடங்கள் கூட முழுமையாக இடமாற்றம் செய்யப்படுகின்றன.

சட்டத்தை அமல்படுத்துமாறு மாநகராட்சிக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால், சட்டத்தை அமல்படுத்த யாரும் விரும்பவில்லை. ஒரு இடத்திலாவது சட்டம் அமல்படுத்தப்படுவதை காட்டினால் டெல்லி மக்களின் மனோபாவம் மாறும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x