Published : 07 Nov 2017 02:36 PM
Last Updated : 07 Nov 2017 02:36 PM

பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு: அருண் ஜேட்லி தகவல்

 

28 சதவீத ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ள மேலும் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது; சில சொகுசு பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஓட்டல்கள், சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற நடவடிக்கை தேவை என அந்த குழு கூறியுள்ளது.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

''கடந்த 4 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உயர்ந்த அளவு 28 சதவீத வரி பிரிவில் உள்ள பொருட்கள் பலவும், குறைவான வரி விகிதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோவே நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்படும். கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் இருக்கைகள், சில வகை பிளாஸ்டிக் பொருட்கள், ஷாம்பூ உட்பட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்படும். அதுபோலவே அமைச்சரவை குழு பரிந்துரைந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றியும் விவாதிக்கப்படும்'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x