Published : 07 Nov 2017 10:55 AM
Last Updated : 07 Nov 2017 10:55 AM

கேரள சட்டப்பேரவையில் சோலார் பேனல் வழக்கின் அறிக்கை 9-ம் தேதி தாக்கல்: அரசியல் களம் சூடான நிலையிலும் புதிய தொழில் தொடங்கிய சரிதா நாயர்

சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிவராஜன் கமிஷனின் அறிக்கை வரும் 9-ம் தேதி கேரள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. கேரள அரசியல் களமே பரபரப்பாக உள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய சரிதா நாயர் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

கேரளாவில் முந்தைய உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது

சோலார் பேனல் விவகாரத்தில் பல கோடிகளுக்கு முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க 2013 அக்டோபர் 23-ல் ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது.

கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, முன்னாள் மின் துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது ஆகியோருக்கு கோடிகளில் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். பாலியல் ரீதியாகவும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக சரிதா நாயர் சொன்னது கேரளாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன், 4 பாகங்களை கொண்ட அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கை வரும் 9-ம் தேதி வியாழக்கிழமை கேரள சட்டப்பேரவையில் வைக்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலரும் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்த பதற்றத்தில் உள்ளனர். ஆனால் இவ்வழக்கின் மையப் புள்ளியான சரிதா நாயரோ, குமரி மாவட்டத்தில் காகித கப், பிளேட் தொழிற்கூடத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

தக்கலையில் என்.எஸ்.எக்கோ இன்டஸ்ட்ரீஸ் என்னும் பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ள சரிதா நாயர் தி இந்துவிடம் சோலார் பேனல் விவகாரம் குறித்து கூறுகையில், “நான் தப்பு செய்யவில்லை என சொல்லவில்லை. நேற்று வரை நான் மட்டும் குற்றவாளி என பேசியவர்கள் இன்று இவளும் அதில் ஒருவர்தான் என பேசத் தொடங்கியுள்ளனர். குமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை சாலையில் தொழிற்கூடம் அமைத்து, உலராத காகிதப் பூ, பேப்பர் கப், பேப்பர் பிளேட் தயாரிக்கிறேன்.

சோலார் பேனல் விவகாரத்தை பொறுத்தவரை நான் மீடியேட்டர் மட்டும்தான். பிரச்சினை என வரும் போது, அதன் இயக்குநர், கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் என்னை சிக்கவைத்து விட்டு தப்பிக்க முயன்றனர். இந்த விவகாரம் வெளியில் வரும் போது 6 கோடி ரூபாய் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி இருந்தேன். அதில் இரண்டரை கோடி ரூபாய் என் அம்மாவின் சொத்துகளை விற்று அடைத்தேன். இன்னும் ஜந்து மாதங்கள் இருந்திருந்தால் நானே மொத்த தொகையையும் அடைத்திருப்பேன். சோலார் பேனல் மோசடி என்ற ஒன்றே வெளியில் வந்திருக்காது. விஷயம் வெளியில் வந்ததும் அரசியல் பின்புலத்தால் என்னை மிரட்டவும் செய்தனர். நான் பயப்படவில்லை.

ஆண் என்றால் லஞ்சமும், பெண் என்றால் வேறு சிலவற்றையும் லஞ்சமாக கேட்கும் போக்கும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் 9-ம் தேதி விடை தெரிந்துவிடும்”என்கிறார்.

தமிழகத்தில் கூட உங்கள் மீது காற்றாலை தொடர்பான வழக்கு உள்ளதே என்று கேட்டதற்கு, “அது பராமரிப்பு வழக்குத்தான். காற்றாலைக்கு பொருள்கள் கொடுப்பதில் தவறு நடக்கவில்லை. அது 90 மீட்டர் கேபிளுக்காக தொடரப்பட்டது. அதன் விலை 20 முதல் 25 ஆயிரம் தான்.”என்றார். கேரளாவை சோலார் பேனல் வழக்கு உலுக்கிக் கொண்டிருக்க, சரிதா நாயரோ நிதானமாக புதிய தொழிலை தொடங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x