Last Updated : 07 Nov, 2017 11:00 AM

 

Published : 07 Nov 2017 11:00 AM
Last Updated : 07 Nov 2017 11:00 AM

தேசிய அங்கீகாரம் பெற ஒரு சதவீத மருத்துவமனைகள் மட்டுமே ஆர்வம்

நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து தேசிய அளவில் ‘ரேங்க்’ அளிக்கப்படுவது போல் மருத்துவமனைகளையும் மதிப்பீடு செய்து தேசிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதற்கான பணியில் மத்திய அரசு சார்பில் மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு சொந்தமாக நாடு முழுவதும் சுமார் 79,000 மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் இதுவரை வெறும் ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே இந்த அமைப்பிடம் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதில் சுமார் 700 மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் பிரபல தனியார் பெருநிறுவன மருத்துவமனைகள் வட்டாரத்தில் கூறும்போது, “என்ஏபிஎச் அங்கீகாரத்துக்காக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், சிகிச்சைக்கான கருவிகள் என அனைத்தும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இத்துடன் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அவற்றில் சிகிச்சை பெறுவோர் மற்றும் பணியாளர்களுக்கும் அதிக பலன் கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான மருத்துவமனைகள் அங்கீகாரம் பெறுவது தேவையற்ற செலவு எனக் கருதி அதற்கு முன்வருவதில்லை. எனவே அனைத்து மருத்துவமனைகளும் தேசிய அங்கீகாரம் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளை தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா, கென்யா ஆகியவற்றில் இருந்து இங்கு சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்திய தொழிலக கூட்டமைப்பு (FICCI) அளிக்கும் புள்ளிவிவரப்படி இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் சிச்சைக்காக வருகின்றனர். இதனால் இந்தியாவில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய கொள்கை அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் என்ஏபிஎச் அங்கீகாரம் பெறுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் (IRDA) உறுப்பினராகியுள்ள சுமார் 33,000 மருத்துவமனைகள் அடுத்த இரு ஆண்டுகளில் என்ஏபிஎச் அங்கீகாரம் பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மீதம் உள்ள மருத்துவமனைகளுக்கும் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x