Published : 10 Nov 2017 03:05 PM
Last Updated : 10 Nov 2017 03:05 PM

ஷேவிங் கிரீம், சாக்லெட்,பேஸ்ட், சோப்புக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

ஷேவிங் கிரீம், சலவை சோப்பு உட்பட பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல் படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது; சில சொகுசுப் பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம் குவஹாட்டியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின், பீஹார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியதாவது:

''பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற அமைச்சரவை குழுவின் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது. 227 பொருட்கள் தற்போது 28% வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதில் 62 பொருட்களை மட்டுமே இருக்க வேண்டும் என அமைச்சரவைக் குழு பரிந்துரைத்தது.

ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த எண்ணிக்கையை மேலும் குறைந்துள்ளது. தற்போது, 28 சதவீத வரையறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே வருகின்றன. ஷேவிங் கிரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப் பொருட்கள், பெண்களுக்கான முக அழகு கிரீம், சுவிங்கம், சாக்லெட், உள்ளிட்ட பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், திரைப்படம் தயாரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றிக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விளைபொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

எனினும் வாஷிங்மெஷின், ஏசி எனப்படும் குளிர்சாதனப்பெட்டி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்டவற்றிக்கு தற்போதுள்ள 28 சதவீத வரி தொடரும்'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x