Last Updated : 30 Nov, 2017 09:16 AM

 

Published : 30 Nov 2017 09:16 AM
Last Updated : 30 Nov 2017 09:16 AM

உத்தர பிரதேசத்தில் அரசு மானியம் பெற பெயரளவில் செயல்பட்ட 17 மதரஸாக்கள்: பதிவை ரத்து செய்து யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை

உத்தர பிரதேசம், சஹரான்பூர் மாவட்டத்தில் மாநில அரசின் மானியத் தொகை பெறுவதற்காக பெயரளவில் 17 மதரஸாக்கள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி.யில் சுமார் 8,000 மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. அரசிடம் பதிவு செய்யப்பட்ட இந்த மதரஸாக்களில் 560-க்கு மாநில அரசு மானியம் வழங்குகிறது. இவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் பெறுகின்றன.

இந்நிலையில் உ.பி.யில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் அம்மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் கல்வி தொடர்பான சில விளக்கங்கள் கேட்டு மாநில சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதில் சஹரான்பூர் மாவட்டத்தில் 29 மதரஸாக்கள் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்பதால் அவற்றை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறை நடத்திய ஆய்வில், 17 மதரஸாக்கள் பெயரளவில் செயல்பட்டு வந்ததும் அவற்றுக்கு கட்டிடமோ, மாணவர்களோ இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றின் பதிவை ரத்து செய்த மாநில அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 2012 முதல் 2017 வரை இந்த மதரஸாக்கள் பெற்ற மானியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளரும் மாநில முன்னாள் அமைச்சருமான ராஜேந்தர் சவுத்ரி கூறும்போது, “போலி நிறுவனங்கள் மீது பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சஹரான்பூர் மாவட்டத்தில் கடைசிகட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சோதனை உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறது. இதன்மூலம் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை பெற அரசு முயற்சிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x