Published : 10 Nov 2017 08:53 AM
Last Updated : 10 Nov 2017 08:53 AM

காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதால் டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை: தொழிற்சாலைகளை மூடவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) நேற்று தடை விதித்து உத்தரவிட்டது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றி உள்ள மாநிலங்களின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. அத்துடன் காற்று மாசும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிடக் கோரி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு என்ஜிடி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்காதது மற்றும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடாதது குறித்து டெல்லி அரசுக்கும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லியை ஒட்டி உள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை எவ்வித கட்டிட கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மாசு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் வரும் 14-ம் தேதி வரை இயக்க அனுமதிக்கக் கூடாது.

வெளி மாநிலங்களிலிருந்து வரும் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் லாரிகளை டெல்லி மாநகருக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் அவ்வப்போது கூடி இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் என்ஜிடி உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசு மிக அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாகன கட்டுப்பாடு

காற்று மாசு அதிகரிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் டெல்லி மற்றும் அதை ஒட்டி உள்ள மாநில தலைமைச் செயலாளர்களை அழைத்து காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். செயற்கை மழை பெய்ய வைப்பது குறித்தும் ஆலோசிக்கலாம். கடந்த ஆண்டு சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது போல, பதிவெண் அடிப்படையில் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை குறுகிய காலத்துக்கு அமல்படுத்தலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என டெல்லி அரசு நேற்று அறிவித்தது. இதன்படி, ஒற்றைப்படை தேதியில் ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை பதிவெண் கொண்ட வாகனங்களும் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.

இதனிடையே, காற்று மாசைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x