Published : 10 Nov 2017 09:32 AM
Last Updated : 10 Nov 2017 09:32 AM

சசிகலாவின் பரோலும், ரெய்டு ‘முகூர்த்தம் நிச்சயமான பின்னணியும் - வருமான வரித்துறை சொல்லும் ரகசியம்

சசிகலா, தினகரன் ஆகியோருக்கு நெருக்கமான 180-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நாளில் வருமான வரித் துறை நடத்திய மெகா சோதனை நாடு முழுவதும் ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது. வருமான வரித் துறை இந்த முகூர்த்த நாளுக்கு எப்படி தேதி குறித்தது என விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

“கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, திடீரென சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்ல நேரிட்டது. அந்த அவசரத்தில் சொத்துகள் பரிமாற்றம், முதலீடுகள் பரிவர்த்தனை என எந்த விவகாரத்தையும் சரியாக செய்ய முடியாமல் போனது. இந்த திடீர் தண்டனையால் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானோரின் அத்தனை சொத்து சார் செயல்பாடுகளும் முடங்கின.

இந்நிலையில் கணவர் நடராஜனின் உடல்நிலையைக் காரணம் காட்டி சசிகலா கடந்த அக்டோபர் 5-ம் தேதி பரோலில் சென்னைக்கு வந்தார். அப்போது அவசர கதியில் விட்டுச் சென்ற சொத்துகள் பரிமாற்றம், முதலீடுகள், ஆவணங்கள் பெயர் மாற்றம், பினாமிகளின் பெயர் பரிசீலனை உள்ளிட்டவற்றை கச்சிதமாக செய்து முடித்தார். சசிகலா சென்னையில் இருந்த 7 நாட்களும் அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் குழு, அந்த வீட்டிலே தங்கி அத்தனை வேலையும் செய்து முடித்தது.

சசிகலா பரோலில் வந்த தினத்தில் இருந்து மறுபடியும் சிறைக்கு சென்ற நாள் வரை நடந்த சொத்து பெயர் மாற்றங்கள், முதலீடு தொடர்பான பரிவர்த்தனைகள், பினாமி சொத்துகளின் நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியவற்றை வருமான வரித்துறை உன்னிப்பாக கவனித்தது. அப்போது இந்த பணிகளை கச்சிதமாக நிறைவேற்றிய வழக்கறிஞர் குழுவின் ஆவணங்களை ஆராய்ந்தது. குறிப்பாக தமிழகத்தில் கோழிப்பண்ணை நிறைந்த மாவட்ட மற்றும் கடலோர மாவட்டத்திலும் இருந்த இரு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் இருந்து எடுக்கப்பட்ட பட்டியலைக் கொண்டே வருமான வரித் துறை இந்த சோதனையை வடிவமைத்தது.

அந்த பட்டியலில் இடம்பெற்ற அத்தனை பேரின் வீடு மற்றும் அலுவலகங்கள், தொழில் தொடர்பான அத்தனை தகவல்களையும் தோண்டி எடுத்த பிறகே, நேற்று சோதனைக்கு நாள் குறிக்கப்பட்டது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x