Published : 18 Jul 2023 06:46 AM
Last Updated : 18 Jul 2023 06:46 AM
புதுடெல்லி: இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு: மதிப்பாய்வு 2023-க்கான முன்னேற்றம் என்ற அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமந் பெரி நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உ.பி., பிஹார், ம.பி., ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 2015-16 மற்றும் 2019-21-க்கு இடைப்பட்ட 5 ஆண்டு காலகட்டத்தில் பல பரிமாண வறுமையிலிருந்து 13.5 கோடி பேர் வெளியேறியுள்ளனர். அதன்படி 2015-16-ல் 24.85 சதவீதமாக இருந்த இந்த வறுமை 2019-21-ல் 14.96 சதவீதமாக குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 9.89 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது.
கிராமங்களில் வறுமை 32.59 சதவீதத்திலிருந்து 19.28 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் வறுமை 8.65 சதவீதத்தில் இருந்து 5.27 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 707 நிர்வாக மாவட்டங்களுக்கான பல பரிமாண வறுமை மதிப்பீட்டின் மூலம் உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் வறுமை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
சுகாதாரம், நிதி சேவை, குடிநீர், மின்சாரம், ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதால் இந்தப் பகுதிகளில் வறுமையின் நிலை கணிசமாக குறைந்து மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இவ்வாறு நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT