Published : 17 Jul 2023 05:35 AM
Last Updated : 17 Jul 2023 05:35 AM

டெல்லி குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை எதிர்ப்போம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து பெங்களூருவில் இன்று தொடங்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என்று கடந்த மே 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், டெல்லி அரசின் குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த வகை செய்யும் அவசர சட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். இதற்கு அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று, பாஜக அல்லாத பிற கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். இந்தவிவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் இணைந்து செயல்படுவது குறித்த எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், டெல்லி அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்போம் என ஆம் ஆத்மி தெரிவித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், டெல்லி அவசர சட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து டெல்லியில்செய்தியாளர்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறியதாவது:

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம்இடையூறு செய்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

அந்த வகையில், டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு ஆதரவு அளிப்பது இல்லை என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். இந்த அவசர சட்டம்தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதை எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மி பங்கேற்பு: டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்போம் என காங்கிரஸ் கூறிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டம் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மிசெய்தி தொடர்பாளர் ராகவ் சத்தா கூறும்போது, ‘‘டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். பெங்களூருவில் 17-ம்தேதி (இன்று) தொடங்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x