Last Updated : 17 Jul, 2023 05:19 AM

 

Published : 17 Jul 2023 05:19 AM
Last Updated : 17 Jul 2023 05:19 AM

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் இன்று பெங்களூரு பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெங்களூரு / சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் எதிர்க்கட்சிகளின் 2 நாள்ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில்24-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.

வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன.

இதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில், கடந்த ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் செய்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 24-க்கும் மேற்பட்ட‌ எதிர்க்கட்சி தலைவர்களுக்கு க‌ாங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த‌ தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக, முதல்கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் 24-க்கும் மேற்பட்ட‌ கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி இன்று மாலை 6 மணிக்கு விருந்து அளிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, நாளை (18-ம் தேதி) காலை 11 மணிக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இதுதவிர‌, சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர்கள் உத்தவ் தாக்கரே, ஆதித்யதாக்கரே ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்போம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதால், இக்கூட்டத்தில் ஆம் ஆத்மியும் பங்கேற்கிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் இதில் பங்கேற்பார் என தெரிகிறது.

24-க்கும் மேற்பட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால், பெங்களூருவில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின்இன்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர், நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்குகிறார். பின்னர், நாளை இரவு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு9 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x