Last Updated : 15 Jul, 2023 04:17 AM

 

Published : 15 Jul 2023 04:17 AM
Last Updated : 15 Jul 2023 04:17 AM

புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: 41 நாளுக்கு பிறகு நிலவை சென்றடைகிறது

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

நிலவின் பரப்பில் மெக்னீசியம், அலுமினியம், சிலிகான் உள்ளிட்ட தனிமங்கள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்து அதற்கான ஆதாரங்களையும் புகைப்படமாக அனுப்பியது. இத்திட்டத்துக்கு மிக குறைவாக ரூ.386 கோடி மட்டுமே செலவானதால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்தது.

அதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்தது. ரூ.604 கோடியில் சந்திரயான்-2 உருவாக்கப்பட்டது. இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

பல்வேறுகட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால், திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பமுடிவு செய்யப்பட்டது.

5-ம் தலைமுறை ராக்கெட்: சுமார் ரூ.370 கோடியில் தயாரிக்கப்பட்ட எல்விஎம்-3, ஜந்தாம் தலைமுறை ராக்கெட் ஆகும். இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்களிலேயே இதுதான் மிகவும் சக்திவாய்ந்தது. இதன்மூலம் அதிகபட்சம் 8,000 கிலோ வரையிலான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இதன் இறுதி நிலையில் பயன்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம் மிகவும் சிக்கலான வடிவமைப்பு உடையது. வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்த இயந்திரத்தை முழுவதும் தற்சார்பில் இந்தியா வடிவமைத்துள்ளது.

இந்நிலையில், ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

பூமியில் இருந்து நிலவு 3,84,000 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்களில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 20 நாட்களுக்கு, குறைந்தது 170 கி.மீ. தூரம் - அதிகபட்சம் 36,500 கி.மீ தூரம் கொண்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை விண்கலம் சுற்றிவரும். அதன்பிறகு, இந்த சுற்றுப்பாதை உயரம் 3 லட்சத்து 84,000 கி.மீ.க்கு உயர்த்தப்படும். அந்த நிலையில், பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்த இடத்தை அடைந்ததும் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் விண்கலம் உந்தி தள்ளப்படும்

நிலவை நோக்கிய பயணம்: இதையடுத்து, நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான்-3 தொடங்கும். ஒருவார பயணத்துக்கு பிறகு, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழையும்.

அதைத் தொடர்ந்து, நிலவின் சுற்றுப்பாதையில் மட்டும் சந்திரயான் 13 நாட்கள் சுற்றி வரும். இந்த சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே விண்கலம் கொண்டு செல்லப்படும்.

நிலவில் இருந்து 100 கி.மீ.தூரத்தில் சந்திரயான் விண்கலம் இருக்கும்போது, அதில் இருந்து லேண்டர் கருவி தனியே பிரிக்கப்படும்.

ஆக.23-ம் தேதி மாலை..: பின்னர், லேண்டரின் வேகத்தை படிப்படியாக பூஜ்ய நிலைக்கு குறைத்து, நிலவின் தென் துருவத்துக்கு அருகே ஆக.23-ம் தேதி மாலை 5.47 மணி அளவில் மெதுவாக தரையிறக்கப்படும். அதில் இருந்து ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

இத்திட்டம் வெற்றி பெற்றதும், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென்துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x