Published : 06 Jul 2023 06:08 AM
Last Updated : 06 Jul 2023 06:08 AM

19-ம் தேதி வரை தீஸ்தா சீதல்வாட்டை கைது செய்ய தடை

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மீது குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், தீஸ்தா சீதல்வாட் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்ஜார் தேசாய் கடந்த 1-ம் தேதி தள்ளுபடி செய்தார். மேலும், உடனடியாக சரணடைய உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் அன்று மாலையே அவசர மனு தாக்கல் செய்தார். அப்போது சுவாரசியமான சம்பவம் நடந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதனின் மகள் சுவமா விஸ்வநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி மாலை டெல்லி சின்மயா மிஷனில்நடைபெற்றது. இதில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி கள், சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

மாலை 6 மணி அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியதும், உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் சார்பில் ஜாமீன் கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தமனு நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா,பிரசாந்த் குமார் மிஸ்ரா தலைமையில் 6.30 மணிக்கு விசாரணைக்கு வருவதாக தகவல் பரவியது.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றம் சென்று குஜராத் அரசு சார்பில் வாதாடினார். இருதரப்பு வாதங்கள்முடிந்த நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதுகுறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு இரவு 7 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் நடன நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் அரங்குக்குள் சென்றுநிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினார். இதற்கிடை யில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்திலிருந்து மீண்டும் நடன நிகழ்ச்சிக்கு திரும்பினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, இந்த வழக்கு விவரம் குறித்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா, தீபங்கர் தத்தாஆகியோரிடம் தலைமை நீதிபதிதெரிவித்தார். அதன்பின் 3 நீதிபதிகளும் விசாரணை நடத்தி இரவு 10 மணிக்கு தீஸ்தாவுக்கு தற்காலிக ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தனர்.

மேலும், குஜராத் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், 19-ம் தேதி வரை தீஸ்தாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதன்மூலம் உடனடியாக சரணடைய வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x