Published : 06 Jul 2023 06:00 AM
Last Updated : 06 Jul 2023 06:00 AM

ம.பி | பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்தவர் கைது - சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்தது அரசு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு, பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ கடந்த செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் ம.பி.யில் இது அரசியல் கொந்தளிப்பை தூண்டுவதாகவும் அமைந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பிரவேஷ் சுக்லா என்பவரை சித்தி மாவட்டத்தின் பஹ்ரி பகுதியில் உள்ள குப்ரி என்ற கிராமத்தில் போலீஸார் நேற்று அதிகாலையில் கைது செய்தனர். குற்றவாளி, பாதிக்கப்பட்ட இளைஞர்ஆகிய இருவரும் குப்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பிரவேஷ் சுக்லா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரவேஷ் சுக்லா, பாஜகவைச் சேர்ந்தவர் எனவும் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின்பிரதிநிதி எனவும் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள், காங்கிரஸார் குற்றம் சாட்டினர்.

ஆனால் இதனை பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் எனது பிரதிநிதி அல்ல. கட்சியில் அவர் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் கட்சியின் உறுப்பினர் கூட அல்ல. நான் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் எவரும் என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்’’ என்றார்.

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில் “குற்றவாளியை கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் பிரவேஷ் சுக்லாவுக்கு சொந்தமான கட்டிடத்தை அதிகாரிகள் நேற்று பொக்லைன் மூலம் இடித்து தள்ளினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x