Published : 01 Jul 2023 04:51 PM
Last Updated : 01 Jul 2023 04:51 PM

RIP Humanity | பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய காவலர்... வருத்தம் தெரிவித்த ரயில்வே அதிகாரி!

புனே: உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது தண்ணிரை ஊற்றி எழுப்பிவிட்ட ரயில்வே காவலரின் செயலுக்கும் ரயில்வே துறைக்கும் கண்டனங்கள் குவிந்துவரும் நிலையில், புனே ரயில் நிலைய கோட்ட மேலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"RIP Humanity. Pune Railway Station" இந்தத் தலைப்புடன் இணையத்தில் ஒரு வீடியோ வைராலானது. அந்த வீடியோவில் ரயில்வே நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றிய வண்ணம் செல்கிறார் ரயில்வே போலீஸ் ஒருவர். ஓர் இளைஞர், முதியவர் என மூன்று பேர் பதறிப்போய் எழுந்து பார்க்கின்றனர். அந்தக் காவலரோ எதுவுமே நடக்காததுபோல் கடந்து செல்கிறார். அருகில் நடந்து கொண்டிருந்த பயணிகள் சிலர் அந்தக் காவலரின் செயலை அதிர்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

நடைமேடையை ஆக்கிரமித்து பயணிகள் படுத்துறங்கியதால் அவர்களை அப்புறப்படுத்த அந்தக் காவலர் அப்படி நடந்து கொண்டார் எனத் தெரிகிறது. ஆனால், அவருடைய நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்பதால் அது இணையத்தில் கடுமையான விமரச்னங்களை எதிர்கொண்டு வருகிறது. பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலான இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துள்ளது. பல லட்சம் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து புனே ரயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர், "நடைமேடையில் தூங்குவதென்பது நடந்து செல்பவர்களுக்கு நிச்சயமாக இடையூறுதான். ஆனால் அதற்காக அந்தச் சூழலைக் கையாண்ட விதம் நிச்சயமாக சரியானது அல்ல. சம்பந்தப்பட்ட அந்த ஊழியரிடம் பயணிகளை மாண்புடன், மரியாதையுடன், கனிவாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்காக வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x