ரஷ்யாவுக்கு நெருக்கடி முதல் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 24, 2023

ரஷ்யாவுக்கு நெருக்கடி முதல் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 24, 2023
Updated on
3 min read

பழநி கோயில் கட்டணக் குறைப்புக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி: "பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி கட்டண உயர்வை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் அறங்காவலர் குழுவினரை அழைத்து, இது அதிகப்படியான கட்டணம் என்று தெரிவித்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "HRCE"எனும் கைபேசி செயலியினை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பாலியல் குற்றங்கள் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பெண் நீதித் துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்ற வழக்கில், குமரி மாவட்ட சிறுமியிடம் வாக்குமூலத்தை ஆண் நீதித் துறை நடுவர் பதிவு செய்துள்ளதை சுட்டிக் காட்டி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி ஹெல்த் அப்டேட்: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், 7-வது தளத்தில் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உதவித் தொகை குறைப்பு: அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்: ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் உதவித் தொகையை குறைத்து வெளியிட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மூடப்படும் அபாயத்தில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள்:சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட குறு,சிறு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம்: பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள சனி வாரச்சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.8 கோடிக்கு வர்த்கம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 11,000 ஆடுகள் விற்பனையாகின.

அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

மணிப்பூரில் நிலவிவரும் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை மாலையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்தது.

“பிரதமர் மோடியின் எகிப்து பயணம் புதிய உத்வேகம் தரும்”: இந்த ஆண்டு முதல் தூதரக உறவாக உயர்ந்துள்ள எகிப்து உனான பலதரப்பட்ட உறவுகள், மத்திய கிழக்கு நாட்டுக்கான பிரதமர் மோடியின் வருகையால் மேலும் வலுடையும் என்று எகிப்துக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 1997-ம் ஆண்டுக்கு பின்னர் எகிப்துக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்”: தனது இரண்டரை நாள் அமெரிக்கப் பயணத்தின் நிறைவில் பிரதமர் மோடி, அமெரிக்க வணிகச் சமூகத்தினரிடம் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு வலியுறுத்தினார். அமெரிக்க - இந்திய கூட்டாண்மை மன்றம் ஒருங்கிணைத்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "இந்தியாவின் தனிநபர் நுகர்வும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கடந்த பத்து ஆண்டுகளில் 1.5 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதீத வறுமை படிப்படியாக முடிவுக்கு வருகிறது. அதேநேரத்தில் நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான தருணம். இருநாட்டு அரசுகளும் அதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. இங்குள்ள வணிகச் சமூகம் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்" என்றார்.

"ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் வழியில் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் துவசம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள்" என்று ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பான வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில்,‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’என்று பதிவிட்டுள்ளது.

வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.

வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in