

மேட்டூர்: எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வாரச் சந்தையில் ஆடுகள், கோழிகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.8 கோடிக்கு வர்த்கம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனி வாரச்சந்தை இன்று கூடியது. பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 11,000 ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பணைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதிகாலை 4 மணி முதல் இருந்தே விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதில் 10 கிலோ எடைகொண்ட வெள்ளாடு ரூ 5,500 முதல் ரூ.7,000 வரையும், கிடாய் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2.800 முதல் ரூ.3,200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட, ஆடுகள் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை அதிகரித்தது.
இதேபோல், 4 ஆயிரம் பந்தய சேவல், கோழிகள் விற்பனைக்கு வந்தது. இதில் காகம், மயில், கீரி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ/2,500 முதல் ரூ 6,500 வரை விற்கப்பட்டன. பந்தய சேவல்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி சென்றனர்.
மேலும், 160 டன் காய்கறிகள், 30 டன் பலாப்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டது. பலாப்பழம் தரத்திற்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. வாரச்சந்தையில் இன்று ரூ.8 கோடிக்கு வரத்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.