இயற்கையாக சுவாசிக்கும் செந்தில்பாலாஜி: 7-ல் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றம்

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப் படம்
அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, அவருக்கு கடந்த 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில், அவசர சிகிச்சை சிறப்பு பிரிவில் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தனி அறைக்கு மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்காக 7-வது தளத்தில் இருதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 7-வது தளத்தில் இருந்து 4-வது தளத்துக்கு மாற்றப்பட்டார்.

தற்போது, 4-வது தளத்தில் அறை எண் 435-க்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மேலும், செந்தில்பாலாஜி, இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in