Published : 08 Jun 2023 04:03 PM
Last Updated : 08 Jun 2023 04:03 PM

கருணைக் கொலைக்கு அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவருக்கு கியான்வாபி மசூதி வழக்கு முன்னாள் மனுதாரர் கோரிக்கை

வாரணாசி: கியான்வாபி மசூதி வழக்கைத் தொடர்ந்த ஐந்து இந்துப் பெண்களில் ஒருவரான ராக்கி சிங், அதிலிருந்து விலகிய நிலையில், தற்போது தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் - வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கியான்வாபி மசூதியில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த 5 இந்துப் பெண்களில் ஒருவரான ராக்கி சிங் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் இது பெரும் பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில் தற்போது ராக்கி சிங் குடியரசுத் தலைவருக்கு ஒரு கோரிக்கையை விடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனுவில், வழக்கிலிருந்து பின்வாங்கியதற்காக மற்ற 4 பெண் மனுதாரர்களும் தன்னை துன்புறுத்துவதாகவும், அதனால் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறும் கோரியிருந்தார். ஜூன் 9-ஆம் தேதி (நாளை) காலை 9 மணி வரை இதற்கு கெடு விதித்திருப்பதாகவும், அதற்குள் குடியரசுத் தலைவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தான் சுயமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்றும் இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற 4 மனுதாரர்களும் தன்னையும் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்,

குடியரசுத் தலைவருக்கு இந்தியில் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 2022 மே மாதம் இந்த வழக்கை தொடர்ந்த மற்ற 4 பேரும் ஓர் அவதூறைப் பரப்பினார்கள். நானும் எனது உறவினர் ஜிதேந்திர சிங் விசனோ வழக்கிலிருந்து பின்வாங்குவதாகக் கூறினர். இந்தக் குழப்பத்தால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் எனக்கும் என் குடும்பத்திற்கும் எதிராகத் திரும்பியது. இந்தத் தவறான பிரச்சாரத்தை அரசாங்கமும் சேர்ந்தே தூண்டிவிட்டது. இதனால், நானும் என் உறவினரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். நாங்கள் அப்போது அப்படிச் சொல்லியிருக்கவில்லை. ஆனால், அந்தத் தகவல் எங்களை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கியது. இந்த மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெற கருணைக் கொலை மட்டுமே தீர்வு" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று ஜிதேந்திர விசன் நானும் எனது குடும்பத்தினர் (மனைவி கிரன் சிங், மருமகள் ராக்கி சிங்) "கியான்வாபி தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறோம். நாட்டின் நலன் மத நலனுக்கான எங்களின் முயற்சி பல நீதிமன்றங்களில் தோற்றுவிட்டது. இனி இந்த தர்ம யுத்தத்தை முன்னெடுக்கும் பொருளாதார பலமும் எங்களுக்கு இல்லை. இந்த வழக்குதான் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய தோல்வி" என்று கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கு ராக்கி சிங் எழுதியுள்ள கடிதம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களயும் எழுப்பியுள்ளது. உண்மையில் வழக்கிலிருந்து பின்வாங்கினார்களா? இல்லை அவ்வாறாக ஜோடிக்கப்பட்டதா? துன்புறுத்தல் உண்மையா என்று பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x