Published : 07 Jun 2023 12:30 PM
Last Updated : 07 Jun 2023 12:30 PM

ஒடிசா ரயில் விபத்து | மாறுபட்ட கருத்தை பதிவு செய்திருக்கும் ஆய்வுக்குழு உறுப்பினர் 

ஒடிசா ரயில் விபத்துப் பகுதி

புதுடெல்லி: நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய பாலசோர் ரயில் விபத்துக்கான காரணங்கள் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட ஐந்து பேர் அடங்கிய ரயில்வே விசாரணைக் குழுவின் மூத்த ரயில்வே ஊழியர் ஒருவர் விபத்து குறித்து மாறுபட்ட கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் மூத்த செக்ஷன் பொறியாளரான ஏ.கே.மஹந்தா, மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் நேரடியாக முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒருவர். இந்தக் குழு சமர்ப்பித்த 2 பக்க ஆய்வு அறிக்கையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்து.

முதலில், மற்ற நான்கு உறுப்பினர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, 12841 கோரமண்டல் விரைவு வண்டி, மெயின் லைன் வழியாக செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டு, லூப் லைனுக்குள் அந்த ரயில் நுழைந்து அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்ற கருத்தினை ஏற்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்டார். இருந்தபோதிலும் பின்னர் ஆய்வறிக்கையின் கருத்துகளில் இருந்து முரண்பட்டு, தனது மாறுபட்ட இரண்டு கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார்.

பாயிண்ட் (17A) லூப் லைனுக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், டேட்டா லாக்கர் அறிக்கைகளை ஆராய்ந்ததின் அடிப்படையில், அந்த பாயிண்ட் மெயின் லைனுக்காக அமைக்கப்பட்டது. அது ரயில் தடம்புரண்ட பின்னரும் அங்க இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்து மாறுபாடு: ரயில் தடம்புரண்ட நிகழ்வு லெவல் கிராஸிங் கேட் எண் 94 க்கு முன்பே நடந்துள்ளது. அது, பாயிண்ட் 17(A)க்கு முன்பாகவே அமைந்துள்ளது. அதனால் ரயில் லூப் லைனில் நுழைவதற்கு முன்பாகவே ரயில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது என்று வாதிட்டார். தனது இந்த மாறுபட்ட கருத்துக்களை ஜூன் 3ம் தேதி அவர், முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கையெழுத்திட்ட அன்றே பதிவும் செய்துள்ளார். மேலும் இந்த கருத்துகளை கராக்பூர் செக்ஷன் கண்ட்ரோலரிடமும் மஹந்தா தெரிவித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அந்த மூத்த அதிகாரியை தி இந்து (ஆங்கிலம்) தொடர்பு கொண்டு பேசியபோது, "மெயின் லைன் மற்றும் பாயின்ட்காக சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கும் போது, ரயில் லூப் லைனுக்குள் நுழைந்தது என்ற கருத்தினை அவர் மறுத்தார். இருந்த போதிலும் மெயின் லைனுக்கான சிக்னல் சரிசெய்த பின்னர், பாயின்ட் லூப் லைனுக்கு மாறிய நிகழ்வுகள் நடந்துள்ளன.சிக்னல், ரயிலின் பயணம், மற்றும் தடம்புரண்டது தொடர்பாக தெளிவான விளக்கத்தை டேட்டா லாக்கர் பதிவுகள் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.

ஒடிசாவில் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தகோர விபத்து குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (சிபிஐ) ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மஹந்தா அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது கவனத்திற்குரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x