Published : 06 Jun 2023 08:43 AM
Last Updated : 06 Jun 2023 08:43 AM

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்

இம்பால்: மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்த்தி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மெய்த்தி சமூகத்தவர்கள் தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்தை வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3ம் தேதி பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் திடீர் திடீரென வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த வன்முறை காரணமாக இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கங்சுப் என்ற இடத்தில் ஆயுதம் ஏந்திய போராட்டக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்தை மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்தது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. குக்கி சமூகத்தவர்களை காப்புக் காடுகளில் இருந்து வெளியேற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்திற்கு 4 நாள் பயணமாகச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு இரு சமூகங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மணிப்பூரில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே அரசின் முன்னுரிமை என தெரிவித்த அமித் ஷா, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x