ஒகேனக்கல் வனச் சாலையில் நடமாடும் யானைகள் - ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை

ஒகேனக்கல் வனச் சாலையில் நடமாடும் யானைகள் - ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை

Published on

ஒகேனக்கல் வனச்சாலையில் யானைகள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் 16 கிலோ மீட்டர் சாலையில் சுமார் 10 கி.மீ. சாலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி காணப்படும் அடர்வனத்தில் யானை, சிறுத்தை,மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன. இங்கு வாழும் யானைகள் மழைக்காலங்களிலும், குடிநீர் எளிதாக கிடைக்கும் வனத்துக்குள்ளேயே காலங்களிலும் அடர்வனப் பகுதிகளிலேயே வசிக்கின்றன.

ஆனால். கோடை காலம் தொடங்கும்முன்பே வனப்பகுதியில் வறட்சி முகம் ஏற்பட தொடங்கிவிட்டால் யானைகளுக்கு போதிய அளவில் குடிநீர் கிடைப் பதில்லை. எனவே. யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி வனத்தையொட்டி கிராமங்களுக்கும், சாலைகளுக்கும் இடம்பெயர்கின்றன.

ஒகேனக்கல் வனச்சாலையை யொட்டி கடந்த சில நாட்களாக ஒற்றை யானையும், அதுதவிர மேலும் சில யானைகள் அடங்கிய மற்றொரு குழுவும் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது நெடுஞ்சாலையை கடப்பதும், சாலையில் நடமாடுவதுமாக உள்ளன. சில நேரங்களில் சாலையோரமாக வனத்தில் மரக்கூட்டங்களுக்கு கீழே நின்று இளைப்பாறுகின்றன. யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாவாசி களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் யானைகளால் ஆபத்து ஏற்படுவதையும், வாகனங்களால் யானைகளுக்கு ஆபத்து ஏற்படுவதையும் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் சிறப்பு வாகன ரோந்துக் குழு ஏற்பாடு செய்யப்பட்டு இப்பகுதியில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறும்போது, 'ஒகேனக்கல் வனச்சாலையில் யானைகள் நடமாடத் தொடங்கியது முதலே 2 வாகனங்களில் வனத்துறை பணியாளர்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ரோந்துப் பணி மேற்கொள்கின்றனர்.

இவ்வழியே பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் ரோந்துக் குழுவினரின் அறிவுரையை ஏற்று நடந்து கொள்ள வேண்டும். யானைகளைக் கண்டதும் வாகனங்களில் அருகில் சென்றும், வாகனங்களை விட்டு இறங்கி யானைகளின் அருகில் சென்றும் சிலர் 'செல்பி' எடுக்க முயற்சிக்கின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

அறிவிப்பை மீறி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது வனத்துறை சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஒகேனக்கல் வனச் சாலையில் நடமாடும் யானைகள் - ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in