

அன்புள்ள அருண்,
இந்த அத்தியாயம் உனக்கு சமர்ப்பணம். 24 வயதில் நீ வேலூரில் உனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த காலம் அது. அப்போதுதான் அது நடந்தது. தற்செயலா எனத் தெரியவில்லை. புற்றுநோய் தொடர்பான கதைகள் கொண்ட மூன்று படங்களை அடுத்தடுத்து நான் பார்க்க நேர்ந்தது. ஒருவேளை அப்போதெல்லாம் நான் அடிக்கடி உன் நோய் பற்றி இணையத்தில் தேடியதால் எனக்கு அந்தப் படங்கள் பரிந்துரைப் பட்டியலில் வந்ததா என்றுகூட தெரியவில்லை. மூன்றையும் பார்த்தேன்.
நான் முதலில் பார்த்தது ‘தில் பெச்சரா’ (Dil Bechara). சுஷாந்த் சிங் புற்றுநோயாளியாக நடித்த இந்திப் படம். சுஷாந்த் இறந்துபோகும் காட்சியில் உன்னுடைய மரணத்துக்காக முன்கூட்டியே அழுது தீர்த்தேன். என்னை யாரும் தேற்றக்கூட நான் அனுமதிக்கவில்லை.
அடுத்து நான் பார்த்தது அபிஷேக் பச்சன் நடித்த ‘ஐ வான்ட் டு டாக்’ (I want to Talk). இது ஓர் உண்மைக் கதையின் தழுவல். அந்தப் படத்தால் உனக்கு நம்பிக்கை வார்த்தை சொல்ல ஆசை வந்தது. ஆனால், எனக்குதான் மருத்துவர் சொன்ன உண்மை தெரியுமே. மேலும், நான் பேசுவதைக் கேட்கக் கூட நேரம் இல்லாமல் வலி உன்னை விழுங்கிக் கொண்டிருந்தது.
நான் கடைசியாக பார்த்த புற்றுநோயாளி பற்றிய கன்னட படம் தான் 2023-ல் வெளிவந்த ‘ஸ்வாதி முத்தின மலே ஹனியே’ (Swathi Mutthina Male Haniye). ஆனால், முந்தைய இரண்டு படங்கள் போல் அல்லாமல், ராஜ் பி ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம் என்னை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நோய் முற்றிய நிலையில் இருக்கும் உன்னை, உன்னைப் போன்ற பிறரை அணுக வைத்தது.
அருண்... நீ வேதனை நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில், என்னுடன்தான் உன் பாட்டி தங்கியிருந்தார். அவருடன் தான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அந்தப் படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ‘அந்தப் பையனுக்கு என்னாச்சு?’ என்றார். ‘அருணுக்கு வந்த நோய்’ என்றேன். படத்துக்குள்ளேயே சென்றுவிட்டார். இடையிடையே நெகிழ்ச்சியான காட்சிகளில் விளக்கம் கேட்டறிவார்.
உன் வேதனைகளை சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் உன் பாட்டி, அந்தப் படத்தைப் பார்த்து, அதில் அவன் மரணத் தருவாயில் பரிசாக வந்தவளின் பேரன்பைப் பார்த்து ஆசுவாசம் அடைந்ததை உணர்ந்தேன்.
பிரேரனா... அவள் தான் நாம் இந்த அத்தியாயம் வாயிலாக தரிசிக்கப்போகும் பேரன்புக்காரி.
படத்தின் ஆரம்பக் காட்சியில் பிரேரனா, “இங்கே இருப்பவர்கள் அனைவருமே மரணத்துக்காக காத்திருப்பவர்கள். அதை எதிர்கொள்ள அவர்களை நான் தயார்படுத்துபவள்” என்று தன் பணியை விளக்குவாள். படம் முடிந்தபோது பிரேரனா, அருணின் மரணத்தை எதிர்கொள்ள அவனது பாட்டியையும் தயார் படுத்தியிருந்தாள்.
பிரேரனா, அனிகேத், அம்மா, பிரபாகர் மற்றும் நந்தியாவட்டை செடி...
மழையும், பனியும் மாறி மாறி வரும் மலைப் பிரதேசப் பின்னணியில்தான் இந்தப் படம் நகரும். ஆங்கிலத்தில் ‘பிக்சரஸ்க் பியூட்டி’ என்பார்களே, அதை ஒளிப்பதிவாளர் கச்சிதமாக படம்பிடித்திருக்க, இசையமைப்பாளர் ஆன்மாவை வருடும் ராகங்களை மீட்டியிருப்பார்.
பிரேரனா என்றால் உத்வேகம் தருபவள் என்று அர்த்தமாம். நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஆசைகள், லட்சியங்கள் இருக்கும். பிரேரனாவின் பராமரிப்புக்குள் இருப்போருக்கு ‘பிழைத்துக் கிடக்க மாட்டோமா’ என்ற ஒற்றை ஆசை மட்டும்தான். அவர்களுக்கு உத்வேகப் பேச்சுக்களை உதிர்க்கும் பிரேரனாவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் தான் படம்.
அது முதல் சந்திப்பு. பிரேரனா காட்டேஜ் எண் 5-ல் அனிகேத்தை சந்திக்கச் செல்வாள். அவள் கதவைத் திறக்கும் நேரம் ஜன்னலைப் பார்த்து கவிதை பேசிக் கொண்டிருந்தவன், அவள் சென்ட் வாசனையை முகர்ந்து, இதை அணிந்தவர் அழகானவர் என்று முகம் பார்க்காமல் சொல்வான். அந்த ஒரு நொடி பிரேரனாவின் லைஃப் ரொட்டீன் ஃப்ளாஷ் ஆகிச் செல்லும். ஒரு தட்டையான வாழ்வில் முதன்முதலில் ரசனை பாய்ந்த புத்துணர்வோடு உரையாடல் தொடங்கும். ஓர் உன்னத பிணைப்புக்கான விதை அது.
அடுத்தடுத்த நாட்களில் ஹாஸ்பைஸ் மையத்தில் அனிகேத்தின் பிடிவாதங்கள் தொடர, வேலை அழுத்தத்தால் முன்கூட்டியே வீட்டுக்குச் செல்லும் பிரேரனா, தன் கணவரின் திருமணத்தை மீறிய உறவை அறிந்து ஓர் ஏரிக்கரையில் காருடன் ஒதுங்கும்போது போதையில் அனிகேத் மயங்கிக் கிடப்பதைப் பார்ப்பாள். அவனை காரில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பைஸ் மையம் செல்லும் வழியில் அவனை வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று சிபாரிசு செய்வாள்.
ஆனால், அவனிடம் இருந்து எடுத்து கசக்கி எறிந்த கவிதைக் காகித்தை வாசிப்பாள். அது அவள் ட்ரான்ஸ்ஃபர்மேஷனின் முதல் படி. ஒரு திருப்புமுனை. அந்தக் கடிதம் அனிகேத் மீது அவளுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும். அதை ஒரு பரிசுப் பொருளாகக் கொடுக்கும் அவளுக்கே அதை பரிசாகத் தந்து அனுப்புவான் அனிகேத்.
இன்னொரு நாள் பிரேரனாவின் காட்டன் புடவையை தொட்டுப் பார்க்க ஆசைப்படுவான். பெரிதும் நெருங்கிவிடாத அனிகேத்தின் அந்த ஆசைக்கு இணங்குவாள், கூடவே அதுபோல் ஒரு சேலையை யாருக்கேனும் பரிசளிக்கக் கேட்கிறானோ என்று உறுதி செய்து கொள்வாள். அன்பின் அடுத்த நிலையாக அவன் மீது ஓர் உரிமை கொண்டாடலுக்கு அவளை அறியாமலேயே தயாராகி இருப்பாள் பிரேரனா.
அந்த ஹாஸ்பைஸ் மையத்தில் ஒவ்வொரு நபர் வருகையின்போதும் ஒரு மரமோ, செடியோ நடுவது வழக்கம். அனிகேத் அவனுக்காக தேர்வு செய்தது ஒரு நந்தியாவட்டை செடி. அது பற்றிய உரையாடலில், அனிகேத் அளிக்கும் விளக்கம் ரூமியின் கவிதை போல் இருக்கும்.
இங்கே நம்மில் பலரும் நம்மை யாருக்காவது ப்ரூவ் பண்ணவே நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அதன்பிறகு மலர்ந்து உதிர்ந்த நந்தியாவட்டை அவளுக்கு குப்பையாகத் தெரியாது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் அனிகேத்தும் பிரேரனாவும் தங்களுக்கு இடையே இருக்கும் அன்பு ஒருவித தியான நிலை என்பதை உணர்வர். பிரேரனாவின் வாழ்க்கை அனிகேத்தின் அன்பாலும், அனிகேத்தின் வாழ்க்கை ‘மரணப் பரிசாக’ வந்த பிரேரனாவின் பேரன்பாலும் அழகாகிக் கொண்டிருக்கும்.
அப்போது, பிரேரனாவின் அம்மாவின் வருகை, அவளுக்குள் நிகழும் மாற்றங்களுக்கு ஓர் அங்கீகாரத்தைத் தரும்.
மகள் வீட்டுக்கு வந்த மாத்திரத்திலேயே அவளின் இல்லற வாழ்வு சோபிக்கவில்லை என்பதை தாய் புரிந்து கொள்வார். தாய் மனம் கோணக்கூடாது என்று தன்னுடன் அழைத்துச் செல்லும் பிரேரனா வழியிலேயே அனிகேத்தை பற்றி சொல்லி நேரே அவனிடம் அழைத்துச் செல்வாள்.
தனது கணவன் தாயை நடத்திய விதமும், அனிகேத் தன் தாயை, அத்தனை வேதனைகளுக்கு இடையேயும் எங்கேஜ் செய்யும் பாங்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக அவளுக்குத் தெரியும். அந்த அழகான தருணத்தை தன் மொபைலில் படமாக அடைத்துக் கொள்வாள்.
அன்றைய இரவு உணவுக்குப் பின்னர் அம்மா - மகள் உரையாடல் படத்தின் உயிர்நாடி. நந்தியாவட்டை மலர்களை ரசித்தபடி அமர்ந்திருக்கும் அம்மாவிடம், “எனக்கு அனிகேத்தை பிடித்திருக்கிறது. அது தவறா?” எனக் கேட்பாள்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அனிகேத் - பிரேனனா உறவை சுற்றத்தாரை அறியச் செய்யும். அதனை பிரேனனா எதிர்கொள்ளும் சம்பவங்களும், அனிகேத்தை இந்த உலகை விட்டு வழியனுப்பி வைக்கும் விதமும்தான் படம்.
கணவனின் குதர்க்க கேள்விகளுக்கு பிரேனனா கடத்தும் மவுனப் பார்வையே அவனை குற்ற உணர்வில் நெளியும் சூழலுக்குத் தள்ளும். இந்தக் காட்சியே பிரேரனா தன்னை உணர்ந்து, செதுக்கி, வளர்த்துக் கொண்டிருந்ததன் சாட்சி.
ஹாஸ்பைஸ் மையத்தின் வாட்ச்மேன் பிரபாகரன் பணி நிமித்தமான கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வாரே தவிர மற்றபடி மவுனி. அவரிடம் அனிகேத் பேச முயற்சிக்கும்போது, ‘நாளைக்கு சாகப்போறவரிடம் என்ன பேச்சு’ என்று ஈட்டி பாய்ச்சுவதும், ‘நாளை இருக்காமல் போகலாம் என்பதால்தான் இன்று பேசு என்கிறேன்’ என்று அவன் மவுனத்தை அனிகேத் உடைப்பதும் உணர்வுபூர்வ காட்சியமைப்பின் உச்சம்.
அனிகேத்துக்காக மீன் வாங்கிக் கொண்டுவந்து சமைக்கும் காட்சியில்தான் பிரபாகரன் தன் கதையை சொல்வான். அதுநாள் வரை ஹாஸ்பைஸ் மையத்தில் ‘யூ ஆர் பிரேவ்’, ‘யூ ஆர் ஸ்ட்ராங்க்’, ‘யூ கேன் ஹேண்டில் திஸ்’ எனச் சொல்லி எல்லோருடைய துக்கத்துக்காகவும் பாத்ரூமில் அழுது தீர்க்கும் பிரேரனா, பிரபாகரை தேற்றும்போதுதான் உண்மையான கவுன்சலராக மாறியிருப்பார்.
‘இன்றொரு இரவு என்னுடன் தங்குவாயா..?’ என்று கேட்கும் அனிகேத்துடன், பிரேரனா செலவழிக்கும் அந்த ஓர் இரவு, அவர்கள் காதலின் தீபம் ஒளிரும் நாள்.
மரணம் பற்றிய அனிகேத்தின் புரிதலும், மனிதர்கள் மீது அவனுக்கு இருக்கும் அன்பும் பிரேரனாவுக்கு பெரும் பாடம். நமக்கும்தான்.
அதன் பின்னர் கதையில் நிகழ்பவை எல்லாமே வாழ்க்கையின் தத்துவம். இயக்குநர் ராஜ் பி ஷெட்டி கதையை கவிதையாய் எழுதி, அதன் கடைசி வரிகளை க்ளைமாக்ஸில் வாசித்திருப்பார்.
‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்பது அன்புக்கு வேலிகள் இல்லை என்பதையும் சேர்த்தே உணர்த்துகிறது.
இதுதான், இப்படித்தான், இவ்வளவுதான், இவருக்குத்தான்... இந்த எல்லா வரம்புகளையும் கடந்து ஒருவர் மீது இன்னொருவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பே பேரன்பு. அது மழைத்துளி சிப்பியில் சேர்ந்து முத்தாகும் நிகழ்வைப் போன்றது, பிரேரனா - அனிகேத் அன்பைப் போன்றது.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |