

ஓசூர்: ஓசூர் பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துகளை தடுக்கவும், வன விலங்குகளை பாதுகாக்கவும் சிவப்பு நிறப் பட்டை வேகத்தடைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியையொட்டியுள்ள சாலை அதிக வளைவுகள், மேடு, பள்ளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
சானமாவு வனப்பகுதியை யொட்டியுள்ள இச்சாலையில் அதிகாலை நேரங்களில் யானை கள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்து செல்கின்றன.
மேலும், யானைகள் ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் வலசைப் பாதையாகவும் இப்பகுதி உள்ளது. இதனால், இச்சாலையில் வாகன விபத்துகளும், வாகனங்கள் மோதி வன விலங்குகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகின்றன. வார விடுமுறை நாட்களில் கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால், இச்சாலையில் வாகன நெரிசலும் அதிகரிக்கிறது.
இந்நிலையில், விபத்துகளைத் தடுப்பதுடன், வன விலங்குகளை யும் பாதுகாக்கும் வகையில் பேரண்டப்பள்ளி வனப்பகுதி சாலையில் சிவப்பு நிறப் பட்டை வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது: ஓசூர் வழியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பிரதான தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு அடுத்தபடியாக அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக பேரண்டப்பள்ளி வனப்பகுதி சாலை உள்ளது.
அதேபோல், சானமாவு-பேரண்டப்பள்ளி இடையே வன விலங்குகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்கின்றன. எனவே, இச்சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் சிவப்பு நிறப் பட்டை வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையின் மேற்பரப்பில் நிறம் மாறுவதைக் காணும் வாகன ஓட்டிகள், வாகனங்களின் வேகத்தைக் குறைத்து இயக்குவார்கள். மேலும், சிவப்பு நிறப் பட்டைகளின் மேற்பரப்பில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் லேசான அதிர்வும் ஒலியும், ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலோ அல்லது கவனச் சிதறல் ஏற்பட்டாலோ அவர்களை விழிப்படையச் செய்யும். இதுபோன்ற வண்ணச் சாலை குறியீடுகள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.