

புதுடெல்லி: டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், இளைஞர்களும் நடத்திய பேரணியின்போது காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து, அந்த தேர்வை ரத்து செய்த மத்திய அரசு மறு தேர்வை நடத்தியது. நீட் தேர்வு கசிவில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி நடத்தினர். காவல் துறை அனுமதி இன்றி பேரணியாகச் செல்ல முயன்றதால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கூட்டத்தைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், மாணவர்கள் நடத்திய பேரணியின்போது காவல் துறை அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. முன்னாள் நீதிபதிகள், முன்னாள் சிபிஐ இயக்குநர் மற்றும் முன்னாள் மாநில டிஜிபி (DGP) ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், ஜூலை 20 அன்று நடைபெற்ற நாடாளுமன்றப் பேரணியின் வீடியோ காட்சிகளை ஆய்வுக்காக அக்குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போராட்டங்களின்போது அதிகப்படியான பலப்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டெல்லி காவல் துறை மறுத்துள்ள நிலையில், மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த புகார்களை இந்தக் குழு விசாரிக்க உள்ளது.
இந்த உயர்மட்டக் குழுவை முறைப்படி அமைப்பதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
ஜூலை 20 போராட்டத்தின்போதும் பிற பகுதிகளிலும் தாங்கள் குறிவைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய பெண் போராட்டக்காரர்களின் புகார்களையும் இந்தக் குழு விசாரிக்கும். பேரணியின்போது நடந்த வன்முறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி பதிவுகளை நீதிமன்றம் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (FIR) குறித்த விவரங்களை வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அந்த உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டுக் கொண்டது. இவ்வழக்குகளில் நிவாரணம் வழங்க அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கக்கூடும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் மாணவர்களின் போராடுவதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்தது.