Published : 21 Feb 2023 04:07 PM
Last Updated : 21 Feb 2023 04:07 PM

160 வகை பறவைகள் வலசை வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் ‘சரணாலயம்’ ஆக அறிவிக்கப்படுமா?

மதுரை: ஆண்டு முழுவதும் 160 வகை பறவைகள் வந்து செல்லும் மதுரை சாநத்தம் கண்மாயை தமிழக அரசு சரணாலயமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை பறவையியல் ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மதுரையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் மதுரை - அருப்புகோட்டை சாலையில் விரகனூர் பகுதியில் சாமநத்தம் கண்மாய் உள்ளது. சரித்திர காலத்தில் இருந்து மதுரைக்கும், இந்த கண்மாய்க்கும் பல்வேறு வரலாற்று ஒரு தொடர்புகள் உள்ளன. அவனியாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு இந்த கண்மாய் நீர் ஆதாரமாக திகழ்ந்தது. மதுரையில் ஆண்டு முழுவதும் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரே நீர்நிலையாக இந்த சாமநத்தம் கண்மாய் திகழ்கிறது.

உள்ளூர் பறவைகள் முதல் கண்டம் கடந்து வரக்கூடிய வெளிநாட்டு பறவைகளும் ஆண்டுதோறும் இந்த கண்மாய்க்கு வலசை வந்து செல்கின்றன. ஆனால், இந்த கண்மாயையும், அதில் வசிக்கும் பறவைகளையும் பாதுகாக்க இதுவரை வனத்துறையும், மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியும் முன்னெடுக்கவில்லை. கடந்த சில ஆண்டிற்கு முன் கருவேலம் மரம் அழிப்பு போர்வையில் இந்த கண்மாய்க்கு பறவைகள் வருவது குறையவில்லை.

இந்நிலையில், பறவையியல் ஆய்வாளர்கள் கண்டுப்பிடிப்பில் 160 வகை பறவைகள் இந்த கண்மாய்க்கு வலசை வந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், இந்த கண்மாயை சரணாலயமாக அறிவிக்க கடந்த சில ஆண்டாக பறவையியல் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

திருமங்கலத்தை சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் கூறியதாவது: ''பறவைகள் அதிகம் வந்து செல்லும் கண்மாயை பற்றிய விழிப்புணர்வு அரசு துறை அதிகாரிகளும், மதுரை மக்களுக்கும் இல்லை. வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சியால் சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவு நீர், ரசாயண கழிவு நீர் இந்த கண்மாயில் விடப்படுகின்றன. குப்பைகள் கொட்டி மதுரையின் குப்பை தொட்டியாகவும் மாற்றுகிறார்கள். இவர்களுடைய பொறுப்பில்லாத செயலால் விவசாயிகளும், பறவைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

சாயக்கழிவு, ரசாயண கழிவு கலப்பதால் இந்த கண்மாயை நம்பி விவசாயம் பார்க்கும் விவசாயிகள் விளைநிலத்தில் உள்ளே இறங்கி வேலைபார்க்கும்போது பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகிறது. இந்த கண்மாயில் மரங்கள் அழிக்கப்படுவதற்கு முன், அழிவின் தொடக்கத்தில் இருக்கக்கூடிய கூழைக்கடா, பாம்புத்தாரா நத்தை கொத்தி நாரை, நீர் காகங்கள், மஞ்சள் மூக்கு நாறை போன்றவை இங்கு அதிகளவு கூடு கட்டி பெரிய எண்ணிக்கையில் வசித்தன. தவறான புரிதலில் சீமை கருவேலம் மரம் அகற்றும் போர்வையில் பறவைகள் கூடு கட்டி வசித்த நாட்டு கருவேலம் மரங்களும் அழிக்கப்பட்டன.

பறவைகள் கூடு கட்ட முடியாமல் தவிக்கின்றன. மற்ற பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு 5 மாதம் காலம் மட்டுமே பறவைகள் வரும். ஆனால், ஆண்டு முழுவதுமே பறவைகள் வந்து செல்லும் இந்த கண்மாய் கவனிக்கப்படாத நிலையே உள்ளது. பிளம்மிங்கோ பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. ஐரோப்பா, மத்திய ஆசியா பகுதிகளில் காட்டு வாத்துகள் இந்த கண்மாய்க்கு வருகின்றன.

இதுதவிர பெரும் புள்ளி கழுகு, இந்திய பெரும் புள்ளி கழுகு, பூஞ்சை கழுகு போன்ற இங்கு வலசை வரக்கூடிய கழுகு இனங்களையும் பார்க்கலாம். பெரும் நாரையினங்கள் இந்த பகுதியில் உள்ளன. முக்கியமான கரண்டி வாயின் என்ற பறவையை சொல்லாம். இவை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த பறவைகள் உலக அளவில் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு கட்ட ஆய்வுகள் அடிப்படையில் 160 வகை பறவைகள் ஆண்டு முழுவதும் இந்த கண்மாய்க்கு வலசை வந்து செல்வது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அன்றில் என்ற பறவைகள் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை காணப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக தமிழக நீர்நிலைகளிலே 520 வகை பறவைகள் வந்து செல்கின்றன. அதில், 4ல் 1 பங்கு பறவைகள் சாமநத்தம் கண்மாய்க்கு வந்து செல்வது மதுரையின் சுற்றுச்சூழலும் பறவைகளுக்கு உணவான தாவரம், மீன், பூச்சி என ஒரு மிகப் பெரும் பல்லுயிர்ச் சூழல் இங்கு உயிர்ப்போடு இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. சட்டவிரோதமாக இந்த கண்மாய் மரங்கள் வெட்டப்படுகின்றன. பறவையினங்கள் வேட்டையாடப்படுகின்றன. இதை தடுத்து மதுரை மாநகரில் இருந்து இந்த கண்மாய்க்கு வரும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து நன்னீர் மீன்கள் வாழ வகை செய்து பலவகை மரங்கள் அடங்கிய திட்டுப் பகுதிகளை உருவாக்கி தமிழக அரசு சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்கலாம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x