Published : 21 Feb 2023 02:59 PM
Last Updated : 21 Feb 2023 02:59 PM

ஜேஎன்யு தாக்குதலுக்கு காரணமான இந்துத்துவ அமைப்பினரை உடனடியாக கைது செய்க: சீமான்

சீமான் | கோப்புப் படம்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாசர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அறிவை செதுக்கும் கலைக்கூடங்களான பல்கலைக்கழகங்களை மதவெறிக் கூடங்களாக மாற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றன. கடந்த காலங்களில் வெளியிலிருந்து மதவெறி கும்பல்களைத் துணைக்கு அழைத்து வந்து படிக்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தச் செய்த அவ்வமைப்பினர், தற்போது தாங்களே முன்னின்று இக்கொடுந்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். பாரதிய வித்யார்த்தி அமைப்பினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறைச்செயல்களை கல்வி வளாகத்திற்குள் அனுமதித்து வேடிக்கைப் பார்க்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சிறிதும் பொறுப்பற்றப்போக்கு வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆளும் மதவாத பாஜக அரசின் அதிகார பலம், அதனை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலம் ஆகிய இரண்டும்தான் பாரதிய வித்யார்த்தியைச் சேரந்த மாணவர்கள் சிறிதும் அச்சமின்றிப் படிக்கும் இடத்தில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட முதன்மையான காரணம். படிக்கும் மாணவர்களின் மனதினை சிதைத்து, மதவெறுப்பு நஞ்சினை விதைத்து, அவர்களிடையே பிரிவினையை வளர்த்து, வருங்காலத் தலைமுறையினரை உருவாக்கும் கல்வி நிலையங்களை வன்முறை கூடங்களாக மாற்றி நிறுத்தியிருக்கும் இந்துத்துவ அமைப்புகளின் செயல் இந்திய நாட்டை மிகப்பெரும் அழிவுப்பாதைக்கே அழைத்துச் செல்லும். நாட்டின் தலைநகரில் உள்ள முக்கிய பல்கலைக்கழகத்தில் மதவாதிகளின் இத்தகைய வன்முறைச் செயல்கள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. இக்கொடும் நிகழ்வுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மனிதகுலத்திற்கே எதிரானவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2002ம் ஆண்டு மோடி அரசின் கீழ் குஜராத்தில் நடந்த மதப்படுகொலைகள் வரலாற்றில் என்றும் துடைக்க முடியாத இரத்தக்கறையாக மோடி மீதும், பாஜக மீதும் படிந்துள்ளது. அண்மையில் வெளியான BBC ஆவணப்படம் மூலம் அது தொடர்ந்து துரத்தியும் வருகிறது. ஆகவே, அதுபோன்றதொரு மற்றுமொரு வரலாற்று பழியைச் சுமக்காமலிருக்க ஆர்.எஸ்.எஸ், பாரதிய வித்யார்த்தி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் நிகழ்த்தும் மத வன்முறைகளை இந்தியாவை ஆளும் பாஜக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x