Published : 19 Jan 2023 04:35 AM
Last Updated : 19 Jan 2023 04:35 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலர்கள் முன்பதிவு செய்ய அழைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு 13-வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கணக்கெடுப்பு ஒருங் கிணைப்பாளர் மு.மதி வாணன் கூறியதாவது: பறவைகள் கணக்கெடுப்பை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை நீர்வளம் அமைப்பு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி முத்து நகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

தாமிரபரணி, அதன் துணை யாறுகள் மற்றும் பாசன குளங்கள் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களை தென் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாகவும், வாழை உற்பத்தி மையமாகவும் செழிப்புறச் செய்கின்றன. இப்பாசன குளங்கள் எண்ணற்ற நீர்வாழ் பறவைகளுக்கு குறிப்பாக குளிர் காலங்களில் வலசை வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளன.

இக்குளங்களில் இதுவரைக்கும் 100-க்கும் அதிகமான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், நயினார் குளம், கங்கைகொண்டான், சூரங்குடி ஆகிய குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் திருப்பணிச் செட்டிக்குளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய நீர்நிலைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி குளங்கள் பறவைகளின் இனப்பெருக்கத் துக்கு வாய்ப்பளிப்பதை கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக் கெடுப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

கடந்த 2011- ம் ஆண்டு முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டில் 44 குளங்களில் 75 இனங்களைச் சேர்ந்த 39,231 பறவைகள் கணக்கிடப் பட்டிருந்தன. இவ்வாண்டுக்கான கணக்கெடுப்பு வரும் 27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பறவை ஆர்வலர்கள் மற்றும் பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் பெயரை https://forms.gle/tiakzJrDjxZnd6Rh6 என்ற படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது twbc2020@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் அல்லது முனைவர் அ. தணிகைவேலை 9442965315 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும். பதிவு செய்த தன்னார்வலர்களுக்கு வரும் 27 -ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x