Published : 14 Apr 2024 12:38 PM
Last Updated : 14 Apr 2024 12:38 PM

ஓவேலியில் தொடரும் காட்டு மாடு வேட்டை: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு மாடு.

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வனவிலங்கு வேட்டை அதிகரித்து வருகிறது. சமீப காலமாக காட்டு மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி குன்னூர் அருகே காட்டேரி அணைப் பகுதியில், தலையில் காயத்துடன் காட்டுமாடு உயிரிழந்து கிடந்தது.

கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், உயிரிழந்த காட்டு மாட்டின் நெற்றியில் தோட்டா பாய்ந் திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தோட்டாவை கைப்பற்றி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட நாள் இரவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற வாகனங்களை சிசி‌‌டி‌வி உதவியுடன் பின்தொடர்ந்தனர். இதில், கூடலூரை சேர்ந்த மூன்று பேரிடம் விசாரித்ததில், இறைச்சிக்காக காட்டு மாட்டை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டனர்.

ஓவேலி பேரூராட்சியின் கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாஜி என்பவர், இத்தகைய குற்றச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதைக் கண்டறிந்து, அவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி பகுதியில் காட்டு மாடு வேட்டையாடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘கூடலூர் அருகே ஓவேலி, நியூ ஹோப், 3-ம் நம்பர் பகுதியில் கடந்த 9-ம் தேதி காட்டெருமை இறந்து கிடந்துள்ளது. அதாவது, கூடலூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டதற்கு முதல் நாள். காட்டெருமையின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது. ரம்ஜான் பண்டிகைக்காக வேட்டையாடப்பட்டு, அதனை ஹலால் செய்ததாக கூறப்படுகிறது.

காட்டெருமையின் உடலை அன்றைய தினமே பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினர் புதைத்துள்ளனர். அதன் உடலை பார்க்கும்போது வேட்டையாடப்பட்டு கொல்லப் பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுதுகிறது. காட்டெருமையின் தலைப்பகுதியை காய்ந்த புற்களை கொண்டு மூடிவைத்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது’’ என்றனர்.

கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறும்போது, ‘‘ஓவேலி பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டு மாட்டின் சடலத்தை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். சடலத்தின் பின் பகுதியை மாமிச உண்ணி புசித்துள்ளது. பின்புறத்தில் மாமிச உண்ணியின் கீறல் மற்றும் கடித்த அடையாளங்கள் இருந்தன. சடலம் அழுக ஆரம்பித்ததால், கூடலூர் கோட்ட உதவி வனப் பாதுகாவலர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடியிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

பிரேத பரிசோதனையில் துப்பாக்கி குண்டுகள் இல்லை, கூர்மையான பொருளால் துளையிடப்பட்ட துளை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. துளையிடப்பட்ட துளை மிகவும் ஆழமாக இல்லை ( தோராயமாக 3 செ.மீ. ) மற்றும் விலங்கு இறந்ததற்கு அது காரணம் அல்ல என்பதும் கண்டறியப்பட்டது. மனிதர்கள் வேட்டையாடியதற்கான ஆதாரங்கள் உடலில் காணப்பட்டாலும், அந்த விலங்கு உடலில் மாமிச உண்ணிகள் அடையாளங்களும் காணப்பட்டன.

வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி வன பாதுகாவலர் மற்றும் வனச்சரகர் தலைமையில் தனி குழு விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் நேரம் மற்றும் மதம் சார்ந்த பண்டிகை என்பதால், ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது. சந்தேகத்துக்கிடமான நபர்களின் செல்பேசி அழைப்பு பதிவுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x