Published : 27 Dec 2023 08:13 PM
Last Updated : 27 Dec 2023 08:13 PM

2023 Rewind: கடந்து செல்லாது கற்றுக்கொள்ள... திகைக்க வைத்த காலநிலை மாற்ற நிகழ்வுகள்!

சென்னை கனமழையின்போது அண்ணா சாலை | கோப்புப் படம்: ஆர்.ரகு

காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை 2023 சந்தித்துள்ளது. வரலாற்றிலேயே மிக வெப்பமான கோடை தொடங்கி கடல் மேல்பரப்பு வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவில் பதிவானது வரை பல தாக்கங்களை இந்த ஆண்டு சந்தித்துவிட்டது. ‘எல் நினோ’ ஆண்டு என்பதாலேயே மிக்ஜாம் புயலின் தாக்கமும், தென் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையும் பதிவானது என்ற தகவல்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணங்கள். இவை வெறும் உதாரணங்களாக கடந்து செல்வதற்காக அல்ல என்பதற்காகவே 2023 காலநிலை மாற்ற தாக்கம் தொடர்பான நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்.

மிகவும் வெப்பமான ஆண்டு: 2023 தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் சராசரி வெப்பநிலை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகவே இருந்த நிலையில் ஆண்டு சராசரியும் அதிகரித்து வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக அறியப்பட்டுள்ளது. கோப்பர்னிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S - Copernicus Climate Change Service), அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டின் சராசரி வெப்பம் 2016-ஆம் ஆண்டின் 10 மாத சராசரியைவிட 0.1 டிகிரி செல்சியஸ் அதிகம். 2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை பதிவான வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைவிட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம். 2023 அக்டோபரில் சராசரி தரைக்காற்று வெப்பநிலையானது 15.30 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது 1991 - 2020 காலத்தின் அக்டோபர் சராசரியை ஒப்பிடுகையில் 0.85 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது. “அதனால் 2023-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதிபடக் கூறலாம். இப்போதே தொழில் புரட்சிக்கு முந்தைய சராசரியான 1.43 டிகிரி செல்சியஸை ஆண்டு சராசரி கடந்துவிட்டது” என்று C3S-ன் இணை இயக்குநர் சமந்தா பர்ஜஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் அந்த அறிக்கையில் 2023-ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான பல்வேறு வானிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் பரவலாக பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்தல் கொஞ்சமும் குறையாமல் வரலாற்று உச்சம் தொட்டுள்ளது. கடல் நீர்மட்டம் உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது.

அண்டார்ட்டிக் பெருங்கடலில் பனிக்கட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. வெப்ப நிலையில் முந்தைய பதிவுகளை உடைத்த இந்தப் புதிய பதிவு செவியைப் பிளக்கும் அளவுக்கு எச்சரிக்கையை ஒலிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் மேல்பரப்பு வெப்பநிலை உயர்வு: கடல் மேல்பரப்பு வெப்பநிலை உயரும்போது கடல் வெப்ப அலைகள் உருவாவது இயல்பே. ஆனால் 2023-ல் பதிவான கடல் மேல்பரப்பு வெப்ப நிலை கடந்த காலங்களை ஒப்பிடுகையில் 90 சதவீதம் அதிகமாக இருந்துள்ளது. பொதுவாகவே சர்வதேச கடல் பரப்பு வெப்பநிலை மார்ச் மாதத்திலேயே அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை தொடர்ச்சியாக புதிய உச்சங்களைத் தொட்டது. அதுவும் ஜூலையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (U.S. National Ocean and Atmospheric Administration -NOAA) ஆய்வின்படி ஆகஸ்ட் 2023-ல் உலகம் முழுவதுமுள்ள மொத்த கடல் பரப்பில் 48 சதவீத பரப்பில் கடல் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளன. இது 1991-க்குப் பின் பதிவான புதிய உச்சம் தொட்ட தரவு.

இது குறித்து நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் காவின் ஸ்மிட் கூறுகையில், “உலகம் முழுவதும் பரவலாக கடல் மேல்பரப்பின் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு மனித அழுத்தமே காரணம். நாம் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமான பசுமைக்குடில் வாயுக்களை கடத்துகிறோம். இதுவே கடல் மேல்பரப்பு சராசரி வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொடக் காரணம்” என்றார்.

உருகும் அண்டார்டிக்: அண்டார்டிகாவில் 50 ஆண்டுகள் நிலையாக இருந்த பனிப்பாறையில் 8 கிமீ பரப்பளவு பனி காணாமல் போனது எப்படி என்பது புரியாமல் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பனி முழுதும் மறைந்துள்ளது பின்விளைவுகளை எண்ணி விஞ்ஞானிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் பனிப்பாறை அடுக்கில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் கண்டனர். அப்போது காட்மன் கிளேசியர் என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை 8 கிமீ பரப்பளவு பனியை இழந்துள்ளது தெரியவந்தது. இவர்களின் கண்டுப்பிடிப்புகள் “நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” என்ற இதழில் வெளியானது.

அச்சுறுத்தும் கரியமில வாயு அளவு: சர்வதேச கரியமில வாயு வெளியேற்றம் என்பது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. படிம எரிபொருள் பயன்பாட்டால் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவு 2022-ல் இருந்ததைவிட இந்த ஆண்டு (2023) 1.1 சதவீதம் உயர்ந்துள்ளது. டிசம்பர் 2023-ல் வெளியிடப்பட்ட சர்வதேச கார்பன் பட்ஜெட் அறிக்கையிலும் CO2 வெளியேற்றம் புதிய உச்சத்தை எட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரியமில மற்றும் மீத்தேன் வாயுக்களை உமிழ்வதை முற்றாகத் தடுத்திடும் Net Zero என்ற இலக்குடன் அடுத்த 27 ஆண்டுகள் போராடினால் மட்டுமே 1.5° Centigrade வெப்பநிலை உயராமல் தடுக்க முடியும் என்று விஞ்ஞானிகளும் இயற்கை ஆர்வலர்களும் கருதுகிறார்கள். 2° Centigrade-க்கும் மேல் வெப்பநிலை உயர்ந்துவிட்டால், அதற்குப் பிறகு அந்த வெப்பநிலையைக் குறைக்க முடியாது; அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க முடியாது; நம்மால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்குக் கூட அதனுடைய பாதிப்புகள் இருக்குமென்று தட்பவெப்ப அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள் என்கிறது ஒரு சிறப்புக் கட்டுரை.

COP 28 மாநாட்டின் சிறப்பம்சங்கள்: புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளுக்கு முடிவு கட்டும் நோக்குடன் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற படிம எரிபொருள்களிலிருந்து படிப்படியாக மாறுவதற்கு துபாயில் நடைபெற்ற 28-ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்ற நிகழ்வுகளைப் பற்றிக் கூறும்போது காலநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிடுவதும் முக்கியமாகிறது. ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் 29 ஆண்டுகளில், படிம எரிபொருள் என்ற சொல் தீர்மானத்தில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

தொழிற்புரட்சி காலத்துக்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையின் உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் காலநிலை மாநாட்டு தீர்மானம் ஆகும். ஆனால், வெப்பநிலை உயர்வு இப்போதே 1.2 டிகிரி செல்சியசை கடந்து விட்ட நிலையில் இந்த முறை தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இழப்பு, சேத நிதி ஒப்பந்தம்: காலநிலை தொடர்பான பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு வளரும் நாடுகளுக்கு ஈடுசெய்ய வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை வழங்க துபாய் மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. ஏழை நாடுகள் தமது நாடுகளின் மாசுக்காற்றைக் குறைக்கவும், இயற்கை சீற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் போதுமான உதவிகளை செய்வதற்கு வசதிபடைத்த நாடுகள் முன்வந்துள்ளன. இந்த நிதியானது உலக வங்கியில் வைக்கப்படும். பல்வேறு அரசாங்கங்களும் இதுவரை 792 மில்லியன் டாலர் அளவுக்கு நிதியளித்துள்ளன என்று ஐநா காலநிலை மாற்ற தடுப்பு அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றமும் உணவுத் துறை மீதான தாக்கமும்: காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை COP28 மாநாட்டில் வரலாற்றில் முதன்முறையாக 134 நாடுகள் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி காலநிலை மாற்றம் உணவுத் தொழிலில் ஏற்படுத்தும் தாக்கத்தை களைய உடன்பட்டுள்ளன. இந்த நாடுகள் 5.7 பில்லியன் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளன. அதாவது, உலகம் முழுவதும் உட்கொள்ளப்படும் 70 சதவீத உணவு இந்த நாடுகளால்தான் உட்கொள்ளப்படுகின்றன. 50 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக இந்த நாடுகள் இருக்கின்றன. இதனால், இந்த நாடுகள் காலநிலை மாற்றத்தால் உணவுத் துறையில் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த இணைந்துள்ளன. இதுதான் இலக்கு என்று குறிப்பிட்டு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், இத்தனை நாடுகள் ஒன்றிணைந்ததே முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் நம் சமகாலத்தில் சந்திக்கும் புயல், வெள்ள நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறோம். ஒவ்வொரு முறை புயல் வெள்ளத்திலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி ஓடுகிறோம். ஆனால், பிரச்சினை மீண்டெழுவது அல்ல; மீளாத் துயரில் சிக்காமல் இருப்பதே. அதை உணர்ந்து நம் எதிர்கால சந்ததிகளுக்கு இயற்கை வளங்களை விட்டுவைக்க முயற்சிப்போம்.

- ப்ரியாலி பிரகாஷ் | தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x