Published : 06 Dec 2023 01:37 PM
Last Updated : 06 Dec 2023 01:37 PM

அண்டார்டிகாவில் 50 ஆண்டுகள் நிலையாக இருந்த பெரும் பனிப்பாறை உருகியது! - விஞ்ஞானிகள் அதிர்ச்சி

பனிப்பாறை | கோப்புப் படம்

அண்டார்டிகாவில் 50 ஆண்டுகள் நிலையாக இருந்த பனிப்பாறையில் 8 கிமீ பரப்பளவு பனி காணாமல் போனது எப்படி என்பது புரியாமல் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பனி முழுதும் மறைந்துள்ளது பின்விளைவுகளை எண்ணி விஞ்ஞானிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இங்கு ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் பனிப்பாறை அடுக்கில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதைக் கண்டனர். அப்போது காட்மன் கிளேசியர் என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை 8 கிமீ பரப்பளவு பனியை இழந்துள்ளது தெரியவந்தது. இவர்களின் கண்டுப்பிடிப்புகள் “நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” என்ற இதழில் வெளியானது.

துபாயில் சடங்கு சம்பிரதாய ரீதியிலான ஐநா வானிலை மாநாடு நடைபெறும் வேளையில் பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற நிகழ்வுகள் இத்தகைய பனிப்பாறை மாயங்கள் நிகழ்வது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்மன் பனிபாறையின் 8 கிமீ பரப்பளவு உடைந்து விழுந்ததால் அந்தப் பனிப்பாறையே உஷ்ணமாகிக் கொண்டிருக்கும் கடல் நீரினால் மேலும் பலவீனமடையும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது இன்னும் வேகமாக மீதமிருக்கும் பனியும் அந்தப் பாறையிலிருந்து விரைவில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கண்டுப்பிடிப்புகள் துருவ பனி இயக்கவியலில் கவலையளிக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வுக்குழு, டெலாவர் பல்கலைக் கழகம் மற்றும் லீட்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இந்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்காக சுமார் 9 செயற்கைக்கோள்கள் அனுப்பிய தரவுகளை இவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.

இந்த ஆய்வில் நவம்பர் 2018 முதல் மே 2021 வரை காட்மன் கிளேசியர் அல்லது பனிப்பாறை 8 கிமீ பரப்பளவுக்கான பனியை இழந்துள்ளது தெரியவந்தது. சுமார் அரை நூற்றாண்டு நிலையாக இருந்த பனிப்பாறை இரண்டரை ஆண்டுகளில் 8 கிமீ பரப்பளவு பனியை இழந்துள்ளது என்றால் புவிவெப்பமடைதலின் உக்கிரம் என்னவென்பதை ஊகித்தறியலாம்.

ஏன் இந்த அதிவிரைவு மாற்றம்? - மேற்கு அண்டார்ட்டிகா தீபகற்பத்தின் கடல் நீர் விரைவில் உஷ்ணமடைந்ததே காட்மன் பனிப்பாறை நிகழ்வுக்குப் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. 2018-19-ன் போது சராசரியாக இருந்த கடல் நீர் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பமடைந்துள்ளது. லீட்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர் பெஞ்சமின் வாலிஸ் (Benjamin Wallis) இத்தகைய பெருநிகழ்வின் பின்னணியில் உள்ள தொழிற்பாடுகளை ஆராய்ச்சி செய்துள்ளார். கடல் நீர் அளவுக்கதிகமாக வெப்பமடைந்த நிகழ்வு 1970-ம் ஆண்டுகளிலிருந்தே நிகழ்ந்து வருவது என்கிறார். ஆனால் இதன் விளைவைத்தான் இன்று நாம் அதிவிரைவு மாற்றங்களாகப் பார்க்கிறோம் என்கிறார் அவர்.

கடல் நீர் வெப்பமடைதல் என்பது ஏதோ கடல்நீரின் மேற்பரப்பு விவகாரமல்ல, ஆழ்கடல் வரை வெப்பமயமாதல் ஊடுருவுகிறது என்கிறார் பெஞ்சமின் வாலிஸ். அதாவது மேலே தெரியும் பனிப்பாறையின் முடிவு அல்லது அடிப்பகுதி ஆரம்பம் கடலடித் தரையில் இருப்பதாகும், கடலடி தரை வரையிலான நீர் வெப்பமடைகிறது என்கிறார் அவர், இது மிக மிக ஆபத்தான நிலவரத்தை முன்னுரைக்கிறது என்று எச்சரித்துள்ளார். அதாவது மேலே இருந்து கீழ்நோக்கி பனி உருகுவதல்ல, மாறாக கீழிருந்து மேல்நோக்கி உருகுகிறது. ஐஸ் ஷெல்ஃப் என்பதுதான் பனிப்பாறைகளைத் தாங்கும் ஆதாரமாகும் ஐஸ் ஷெல்ஃப் காலியாகத் தொடங்கினால், அஸ்திவாரமே ஆடிப்போவது போல்தான். காட்மன் பனிப்பாறையில் 8 கிமீ பனி காணாமல் போனது இத்தகைய நிகழ்வினால்தான்.

அதாவது அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் அதாவது புவியுலகச் சுற்றுச்சூழல், வானிலைகளைத் தீர்மானிக்கும் பனிப்பாறைகள் கடல் நீர் வெப்பமடைதலினால் வெகு வேகமாக காணாமல் போய் வருகின்றன, அதாவது உருகிக் கடலில் விழுகின்றன. இதனால் உலக அளவில் கடம் மட்டம் அதிகரிக்கும், கடல் நீரில் உப்பல்லாத புதிய நீர் வரத்து அதிகமாகும் போது பெரிய பெரிய புயல்கள் ஏற்பட்டு கடற்பகுதி நகரங்கள் உலகம் முழுதும் பெரிய அளவில் கடும் பாதிப்புகளைச் சந்திப்பது உறுதி என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

கடல் நீர் வெப்பமடைதலை மாற்ற முடியாது. ஆனால் குறைக்க முடியும். அப்படி குறைக்கவில்லை எனில் பவளப்பாறைகள் வெளுப்பு, பூமியின் பெரும்பனிபாறைகள் உருகுதல், உக்கிரமான சூறாவளிகள் மற்றும் கடுமையான புயல்கள், ஒட்டுமொத்தமாக கடற்சூழலியலின் ஆரோக்கியம் நாசமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குளோபல் வார்மிங்கினால் கடல் நீர் வெப்பமடைதல் கடலின் உயிர்-வேதியியல் அமைப்பையே மாற்றி விடுகின்றன. இதனால்தான் விரைவுகதியில் அதிவேகச் சூறாவளிகள் தோன்றி பேரழிவுகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x