Published : 02 Dec 2023 01:31 PM
Last Updated : 02 Dec 2023 01:31 PM

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் ஐநாவின் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டில் கலந்து கொண்ட ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்ரஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இஸ்ரேல் அதிபர்ஐசக் ஹெர்சாக் உள்பட உலகத் தலைவர்கள் பலரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.

ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பின்போது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் பிரதமர் வரவேற்றார். காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைவான மற்றும் நிலையான தீர்வு காண இந்தியா ஆதரவு வழங்கும் என்று கூறினார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வெற்றிக்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்படுவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்தார்.

ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்ரஸ் உடனான சந்திப்பின்போது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின்போது ஐநா பொதுச்செயலாளர் வழங்கிய ஆதரவுக்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். பருவநிலை இலக்குகளை அடைவதில் இந்தியாவின் முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார். பருவநிலை நடவடிக்கைகள், பருவநிலை நிதி, தொழில்நுட்பம் போன்றவை, பலதரப்பு நிர்வாகம் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் தொடர்பாக வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

நிலையான வளர்ச்சி, பருவநிலை நடவடிக்கைகள், பல்நோக்கு மேம்பாட்டு வங்கி சீர்திருத்தங்கள் மற்றும் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் இந்தியாவின் முயற்சிகளை ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் பாராட்டினார். பிரதமரின் பசுமைக் கடன் திட்டத்தை அவர் வரவேற்றார். இந்தியாவின் தலைமைத்துவப் பணிகளை 2024-ஆம் ஆண்டின் ஐநா உச்சி மாநாட்டில் முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் ஆண்டனியோ குத்ரஸ் பிரதமரிடம் உறுதியளித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற COP 28 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார். அப்போது, COP 28 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஷேக் முகமது பின் சயீதுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். COP 28 இல் பசுமை காலநிலை திட்டம் குறித்த உயர்மட்ட நிகழ்வை இணைந்து ஏற்பாடு செய்ததற்காக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x