Published : 26 Jul 2023 05:30 PM
Last Updated : 26 Jul 2023 05:30 PM

பவானி ஆற்றின் கரையில் 50 டன் குப்பை - மறு சுழற்சி செய்ய ‘மனது வைக்குமா’ மாவட்ட நிர்வாகம்?

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில், பவானி ஆற்றின் கரையில் 50 டன் குப்பைகள் தேங்கியிருப்பதால், ஆறு மாசடைந்து வருகிறது.

அதனை அகற்றி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மேற்கொள்ள, 2 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்க வேண்டும் என்பது பேரூராட்சியின் கோரிக்கையாக உள்ளது. ஈரோடு மாட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையம் பேரூராட்சியில், 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு நாள்தோறும் 5 டன் அளவுக்கு குப்பைகள் சேகரமாகின்றன. இவ்வாறு சேகரமான குப்பைகள் பவானி ஆற்றின் கரையில் கடந்த பல ஆண்டுகளாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால், பவானி ஆறு தொடர்ந்து மாசடைந்து வருகிறது. அதோடு, இங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைப்பதால், காற்று மாசு ஏற்பட்டு வருகிறது.

குப்பைகள் எரிக்கப்படும் பகுதிக்கு அருகே, பழைய கலையனூர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. குப்பைகளில் இருந்து வீசும் துர் நாற்றத்தாலும், குப்பைகள் எரிக்கப்படும்போது எழும் புகையாலும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அரியப்பம்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது: பவானி ஆற்றின் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையில் குப்பைகளை கொட்டி, ஆற்று நீர் மாசடைவதால், இந்த ஆற்று நீரைக் குடிப்போருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களும், பசுமைத் தீர்ப்பாயமும் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே, சாய, சலவை, தோல் ஆலைகளின் கழிவுகள் பவானி ஆற்றில் கலப்பதும், அதனால் ஆறு மாசு அடைவது தொடர்பாகவும், குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், அரசின் ஒரு அங்கமாக திகழும் பேரூராட்சி நிர்வாகமே, பவானி ஆற்றின் கரையில் பல ஆண்டுகளாக குப்பைமேட்டை உருவாக்கி வைத்திருப்பது வேதனை அளிக்கிறது, என்றனர்.

பவானி ஆற்றையும், காற்றையும் மாசு படுத்தும் அரியப்பம்பாளையம் குப்பை மேட்டை அகற்ற வேண்டும் என்றும், குப்பை மேலாண்மைக்கு மாற்று திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை பேரூராட்சி நிர்வாகத்திடம் அளித்துள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஆற்றங்கரையில் உள்ள குப்பை மேட்டில் சமூக விரோதிகள் தீ வைத்த நிலையில், நள்ளிரவு வரை போராடி தீ அணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது; எங்களது பேரூராட்சியில் நாள் தோறும் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யக் கொடுத்து வருகிறோம்.

இந்த பணியில் மட்டும் 10 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குப்பை சேகரிப்பிற்காக எனது சொந்த செலவில் ஒரு வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளேன். பவானி ஆற்றின் கரையில் பேரூராட்சி நிர்வாகம் தற்போது குப்பைகளை கொட்டுவதில்லை. நீங்கள் குறிப்பிடும், பவானி ஆற்றின் கரையில் உள்ள குப்பைகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொட்டப்பட்டவை.

அங்கு குவிந்துள்ள சுமார் 50 டன் குப்பையை அகற்றி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி செய்ய 2 ஏக்கர் நிலம் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அதற்கான நிலத்தை வருவாய்துறை ஒதுக்கும்பட்சத்தில், ஆற்றின் கரையில் உள்ள குப்பையை முழுமையாக அகற்றி, அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டுதலுடன் தனியார் நிறுவனம் மூலம் அவற்றை தரம் பிரிக்க தயார் நிலையில் உள்ளோம்.

பவானி ஆற்றின் கரையில் உள்ள குப்பை மேட்டை அகற்றி விட்டு, அங்கு மரங்கள் அடங்கிய பூங்காவை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அங்கு தேங்கியுள்ள குப்பைகளுக்கு சமூகவிரோதிகள் தீ வைக்கும் போது, அதனை உடனுக்குடன் அணைத்து, மாசு ஏற்படுவதைத் தடுத்து வருகிறோம். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பேரூராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x