Last Updated : 20 Jul, 2023 04:11 PM

 

Published : 20 Jul 2023 04:11 PM
Last Updated : 20 Jul 2023 04:11 PM

மினி கூவமாக மாறி வரும் திருப்பத்தூர் பெரிய ஏரி - மீட்கப்படுமா நகரின் அடையாளம்?

திருப்பத்தூர்: குப்பை கழிவுகளால் சூழப்பட்டு மினி கூவமாக மாறி வரும் திருப்பத்தூர் பெரிய ஏரியை தூர்வாரி புனரமைக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அடையாளங்களில் திருப்பத்தூர் நகரில் உள்ள பெரிய ஏரியும் ஒன்றாகும். 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி தற்போது குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. கோடை காலத்திலும் வற்றாமல் இருக்கும் பெரிய ஏரியில் டன் கணக்கில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் அவ் வழியாக செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை கழிவுகள் மட்டுமின்றி இறைச்சி கழிவுகளும் இங்கு கொட்டப்படுவதால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி பெரிய ஏரி தொடங்குகிறது. ஒரு காலத்தில் திருப்பத்தூர் நகரின் அடையாளமாக திகழ்ந்த பெரிய ஏரி தற்போது சாபக்கேடாக மாறிவிட்டது. அதிகாரிகள் மெத்தனத்தாலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும் பெரிய ஏரி கூவமாக உருவெடுத்துள்ளது.

இந்த ஏரிக்கரை வழியாக ஆலங்காயம், ஆண்டியப்பனூர், ஏரிக்கோடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த ஏரியில் 41.13 மில்லியன் கன அடிக்கு தண்ணீரை சேமிக்க முடியும். திருப்பத்தூர் நகர மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக பெரிய ஏரி விளங்கி வந்தது.

அதிகாரிகளையும், ஆட்சியில் இருப்பவர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை, இப்பகுதி மக்களும் தான் பெரிய ஏரி பாழாக மிக முக்கிய காரணம். நகர குப்பை கழிவுகள் இரவு நேரங்களில் ஏரிக்கரையோரமாக கொட்டப்படுகிறது. இதை இப்பகுதி மக்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் ஏரி மீட்கப்பட்டிருக்கும்.

ஆனால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளையும் ஏரிக்கு அருகாமையில் கொட்டி வருகின்றனர். திருப்பத்தூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்களே இங்கு வந்து குப்பையை கொட்டி விட்டு செல்கின்றனர். ஏரிக்கரையோரம் கொட்டப்பட்டு வந்த குப்பை கழிவுகள் தற்போது ஏரி நீரிலேயே கொட்டி கலக்கப்படுகிறது.

இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள், காய்கறி கழிவுகள், உணவு கழிவுகளை சாப்பிட ஆடு, மாடு, பன்றிகள், தெரு நாய்கள் சுற்றி வருவதால் கரையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகள் சாலை முழுவதும் சிதறிக்கிடக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நகரில் 6 இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை நீரும் இங்கு வந்து கலக்கிறது.

திருப்பத்தூர் பெரிய ஏரியை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கியும், அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வராதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘திருப்பத்தூர் பெரிய ஏரியை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். திருப்பத்தூர் நகராட்சிக்கு பல முறை கடிதம் அனுப்பியுள்ளோம். அப்போது, கழிவுநீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும், பெரிய ஏரியை புனரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இது குறித்து நகராட்சி மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் பெரிய ஏரி மட்டும் இல்லை, அனைத்து நீர்நிலைகளையும் சீரமைக்கவும், பாதுகாக்கவும் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெரிய ஏரியில் கழிவுநீர் கலக்கும் 6 இடங்களில் ‘‘பில்டர் பெட்’’ அமைத்து, 3 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி செய்தால் கழிவுகள் ஏரியில் கலக்க வாய்ப்பில்லை. மேலும், ஏரியை சுற்றியும் சுற்றுச்சுவர் அமைக்கவும் ஆலோசித்து வருகிறோம். ஊட்டி ஏரியில் இது போன்ற நடைமுறைகள் கையாளப்பட்டு, அங்கு ஏரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, திருப்பத்தூர் பெரிய ஏரியை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கான திட்டம் தயாரித்து வைத்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று, அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு, பெரிய ஏரியை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் செய்யும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x