Published : 17 Jul 2023 05:19 AM
Last Updated : 17 Jul 2023 05:19 AM

வைகையின் 282 கி.மீ. ஆற்று பாதை சீரமைப்பு திட்டம்: இந்தியாவின் தண்ணீர் மனிதர் தொடங்கி வைத்தார்

காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த வைகை ஆறு சீரமைப்பு மற்றும் பராமரிப்புக்கான பத்தாண்டு திட்ட அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

மதுரை: வைகை ஆறு சீரமைப்பு மற்றும் பராமரிப்புக்கான பத்தாண்டு திட்ட அறிமுகக் கூட்டம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடந்தது.

‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திரசிங் இதில் கலந்து கொண்டு , வைகை ஆற்று நீர் பாராளுமன்றம் என்ற தன்னார்வக் குழுவை தொடங்கிவைத்து பேசினார்.

இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் குருசாமி பேசியதாவது:

வைகை ஆற்று நீர் பாராளுமன்றம் என்ற தன்னார்வக் குழு வைகை நதி பாயும் மாவட்டங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் அரசு நிர்வாகத்துடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை களப்பணியாற்ற வைக்கும்.

வைகை ஆறு உருவாகும் தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் இருந்து கடலில் கலக்கும் ஆத்தங்கரை கிராமம் வரை உள்ள 282 கி. மீ. ஆற்றுப் பாதை 20 கி. மீ. அளவில் 14 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடிகள், ஆகாயத் தாமரை மற்றும் நெகிழி குப்பை ஆகியவற்றை அகற்றுவது, தொழிற்சாலை ரசாயனக் கழிவு, குடியிருப்புகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தவிர்க்க மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் நீர் அறிவுக் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆற்றின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுப்பது, சிறிய தடுப்பணைகள், நீர் உறிஞ்சு குழிகள், நீர் சேமிப்புக் கிணறுகளை உருவாக்கி, அந்தந்த பகுதி மக்களை ஈடுபடுத்தி நீர் மேலாண்மை பயிற்சி அளிப்பது ஆகிய பணிகளை நீர் பாராளுமன்ற அமைப்பு முன்னெடுக்கும்.

பத்தாண்டுகளில் வைகையாற்றின் வளமும், நீரோட்டமும் மக்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிலைத்தன்மை பெற்றிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கர்நாடக மாநிலம், பீமா ஆற்றின் சீரமைப்பு அனுபவத்தை நரேந்திர சூக் பகிர்ந்து கொண்டார்.

மகாராஷ்டிராவின் சாகர் மித்ரா நிறுவனர் வினோத் போதங்கர் திடக் கழிவு மேலாண்மை அனுபவங்களை விளக்கினார்.

விவசாய அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை வாட்டர் பாடிஸ் ரவி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை மீரா பவுன்டேசன் ராஜா முகமது செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x