Published : 02 Mar 2021 03:13 am

Updated : 02 Mar 2021 05:29 am

 

Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 05:29 AM

அதிமுக – பாஜக பேச்சுவார்த்தையில் சிக்கல்?- கோவை, குமரி, சென்னையில் அதிக தொகுதியை கேட்பதால் இழுபறி

admk-bjp-alliance
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுகவினருடன் நேற்று கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு காரில் வெளியே வரும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகதொகுதிகளை பாஜக கேட்பதால் அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுகவால், பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியவில்லை.


நேற்று முன்தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த 2016 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5.32 சதவீத வாக்குகளைப் பெற்ற பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். 2016-ல் 2.84 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள பாஜகவுக்கு 20தொகுதிகள் தருகிறோம் என்று முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளனர்.

வாக்குச் சதவீதம் குறைவாக இருந்தாலும் பாஜக மத்தியில் தனித்து ஆட்சி செய்யும் கட்சி. கடந்த 4 ஆண்டுகள் அதிமுக அரசு நீடித்ததற்கு யார் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள். பாஜகவுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல. கடந்த2016-ல் தனித்து போட்டியிட்டு நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷாவும், சந்தோஷும் கூறியுள்ளனர். அப்போது ஒரு பட்டியலையும் பாஜக அளித்துள்ளது.

அதில் ஊட்டி, கூடலூர், கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, அவினாசி, திருப்பூர், பல்லடம், ஈரோடு, தாராபுரம், சுலூர், பழநி, கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, ரங்கம், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், ராஜபாளையம், வில்லிபுத்தூர், விருதுநகர், பரமக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, ராதாபுரம், நாகர்கோயில், பத்மநாபபுரம், குளச்சல், கன்னியாகுமரி என்று 40-க்கும் அதிகமான தொகுதிகளின் பட்டியலை அளித்து இதில் தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக கோரியுள்ளது. இதில் 90 சதவீத தொகுதிகள் அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள். இதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

‘விரைவில் சுமுக முடிவு’

சென்னையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நேற்றிரவு (பிப்ரவரி 28) அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜகவுக்கான தொகுதிகள் ஓரிரு நாளில் முடிவாகும். எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என்பதை நான் எங்கும் சொல்லவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் அதிமுக-பாஜக தலைவர்களிடையே நேற்று இரவு அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் ஆகியோரும் அதிமுக தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.அதிமுகபாஜகபேச்சுவார்த்தையில் சிக்கல்கோவைகுமரிஇழுபறிசென்னைAdmk bjp alliance

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x