Last Updated : 28 Feb, 2021 03:18 AM

 

Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைப்பு: அதிருப்தியடைந்த கட்சியினரை உற்சாகப்படுத்த கே.என்.நேரு புது ‘ஐடியா’

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் 2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த கே.என்.நேரு முடிவு செய்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் வகையில் திமுகவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நகரம் என வர்ணிக்கப்படும் திருச்சியில் அக்கட்சியின் 11-வது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கெனவே 5 மாநில மாநாடுகளை நடத்தி அனுபவம் பெற்றுள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஏற்பாட்டின்பேரில், இம்முறையும் வழக்கம்போல பல ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், அலங்கார வளைவுகள், சட்டப்பேரவை வளாகம் போன்ற தோற்றம் உடைய மேடை உள்ளிட்டவை அமைக்க முடிவு செய்யப்பட்டு, பிப்.22, 23-ம் தேதிகளில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையே, மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட வந்த திமுகவின் ஆலோசனை அமைப்பான ஐ-பேக் நிறுவனத்தினர், மாநாடு நடைபெறுவதற்கான இடத்தை மட்டும் சுத்தம் செய்து கொடுத்தால் போதும், மற்ற ஏற்பாடுகளை தாங்கள் செய்து கொள்வதாக கே.என்.நேருவிடம் கூறினர். இதனால் கே.என்.நேரு உள்ளிட்ட திருச்சி திமுகவினர் அதிருப்தியடைந்தனர். அதன்பின் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனைப்படி, 300 ஏக்கரிலிருந்த மாநாட்டு ஏற்பாடுகள் 700 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவடைந்தது.

மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக 400 சிற்றுண்டிகள், குடிநீர், கழிப்பிட வசதிகளை செய்து தரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டிருந்த பிப்.22,23-ம் தேதி மாநாடு நடைபெறவில்லை.

தேதி அறிவித்த மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், இந்த மாநாடு மார்ச் 14-ம் தேதி திறந்த வெளி மாநாடாக நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்தாலும் திட்டமிட்டபடி திமுகவின் மாநாடு நடக்கும். இதற்கான செலவுத்தொகை கட்சி செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஏப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்ததால், திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பு, கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக மாநாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த திமுகவினரிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐபேக் குறுக்கீட்டால் காலதாமதமா?

ஏற்கெனவே கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் 10-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போதைய தள்ளிவைப்பு அறிவிப்பும் திமுகவினரிடத்தில் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் கேட்டபோது, ‘‘மாநாடு தேதியை பிப்ரவரியில் இருந்து மார்ச்சுக்கு தள்ளிப்போட்டதில் ஐ-பேக் நிறுவனத்தின் பங்கு இருப்பதாக கூறுவது தவறு. தீர்மானங்கள் தயாரிப்பது உள்ளிட்ட வேறு சில காரணங்களாலேயே மார்ச் மாதத்தில் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக தற்போது இந்த மாநாட்டை தள்ளிவைத்திருப்பதால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

ஒருவேளை திமுகவினரிடத்தில் சோர்வு ஏற்பட்டிருந்தால், இதை போக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்து விரைவில் திருச்சியில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x