Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டி?

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, அந்த தொகுதியில் தேமுதிக நிர்வாகிகள் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்படங்கள் மூலம் மக்களை கவர்ந்த நடிகர் விஜயகாந்த், ரசிகர் நற்பணி மன்றங்கள் மூலம் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டார். பிறகு, 2006-ம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பாமகவை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார். 2011 பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார். இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நிலை குறைவு காரணமாக, மருத்துவ சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஓய்வு எடுத்து வருகிறார். இருப்பினும், கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, தேமுதிக தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகள் குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், தமிழகம், புதுச்சேரி தேர்தல்களில் தேமுதிக சார்பில் போட்டியிட வரும் 25ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையில் விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்து வருவதால், வரும் தேர்தலில் போட்டியிடுவரா? என கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் மாவட்டத்தில் ஒரு இடம் என தேர்வு செய்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா வரும் சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இருக்கிறது. தேமுதிக கேட்டும் தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதற்கிடையே, தேமுதிகவுக்கான செல்வாக்கு தொகுதிகளை தேர்வு செய்து வருகிறோம். கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இன்னும் உறுதியாகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால், சென்னையில் விருகம்பாக்கம் அல்லதுவிருத்தாசலம், ரிஷிவந்தியம் என ஏதாவதுஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுவார்கள். குறிப்பாக, விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், கட்சியின் இறுதி முடிவை தலைமை அறிவிக்கும்’’என்றனர்.

அதிமுக தலைமையிலான அணியில் இருந்து வரும் தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள்,கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதிமுக தரப்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடைய, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்திவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தேமுதிக போராட்டம் நடத்துவதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x