Published : 16 Mar 2019 05:48 PM
Last Updated : 16 Mar 2019 05:48 PM
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி விரைவில் அறிவிப்பார் எனவும் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடான ஆலோசனைக் கூட்டம் மாநிலப் பொறுப்பாளர் சஞ்சய் தத் தலைமையில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரங்கள், வீயூகங்கள், நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் சஞ்சய் தத் சந்தித்து கருத்து கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தொடர்ந்து தனித்தனியாக சஞ்சய் தத் ஆலோசனை நடத்தி அவர்களிடம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது வெற்றிக்காக செய்யப்பட வேண்டிய வியூகங்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களை ச் சந்தித்த சஞ்சய் தத், "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அனைவருக்கும் தெரிந்தவராக இருப்பார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பார். வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் அறிவிப்பார்" எனவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT